சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ரூ.980 குறைவு


சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ரூ.980 குறைவு
x
தினத்தந்தி 17 March 2020 10:49 AM GMT (Updated: 17 March 2020 10:49 AM GMT)

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு இன்று ரூ.980 குறைந்துள்ளது.

சென்னை,

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சமடைந்தது.  செப்டம்பர் 4ந்தேதி ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 104க்கு விற்பனை ஆனது.  அதன் பிறகு, சற்று விலை குறைய தொடங்கி, ஒரு பவுன் ரூ.28 ஆயிரம் முதல் ரூ.29 ஆயிரத்துக்குள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால், புது வருடம் பிறந்த பின் தங்கம் விலை தொடர்ந்து உயர தொடங்கியது.  கடந்த ஜனவரி 1ந்தேதி ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 735க்கும், ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 880க்கும் விற்பனை ஆனது.  கடந்த ஜனவரி 3ந்தேதி மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80ம், பவுனுக்கு ரூ.640ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 815க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 520க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனால் தங்கம் விலை கடந்த செப்டம்பருக்கு பின் பவுன் ஒன்றுக்கு மீண்டும் ரூ.30 ஆயிரத்தை கடந்து, புதிய வரலாறு படைத்தது.  கடந்த ஜனவரி 8ந்தேதி விலை உயர்ந்து ரூ.31 ஆயிரத்து 432க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்பின் ஜனவரி 14ந்தேதி இதன் விலை சற்றே குறைந்து ரூ.30 ஆயிரத்து 112க்கு விற்பனையானது.  பின்பு தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே சென்றது.  இதன்படி, கடந்த பிப்ரவரி 8ந்தேதி ரூ.31 ஆயிரத்து 184க்கும், பிப்ரவரி 15ந்தேதி ரூ.31 ஆயிரத்து 392க்கும், பிப்ரவரி 20ந்தேதி ரூ.31 ஆயிரத்து 840க்கும், பிப்ரவரி 21ந்தேதி ரூ.32 ஆயிரத்து 96க்கும் பிப்ரவரி 22ந்தேதி ரூ.32 ஆயிரத்து 576க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதன்பின்னர் பிப்ரவரி 24ந்தேதி ரூ.33 ஆயிரத்து 328 ஆக விற்பனையானது.  இதனால் தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டது.  இந்நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை கடந்த பிப்ரவரி 29ந்தேதி பவுன் ஒன்றுக்கு ரூ.624 குறைந்து ரூ.31 ஆயிரத்து 888க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன்பின்னர் தங்கம் விலை கடந்த 2ந்தேதி ஒரு பவுன் ரூ.32 ஆயிரத்து 40 ஆக இருந்தது.  பின் கடந்த 3ந்தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 112 ஆக விற்பனை செய்யப்பட்டது.  இதேபோன்று கிராம் ஒன்று ரூ.4 ஆயிரத்து 14 ஆகவும் விற்பனையானது.  பின்னர் இந்த விலை மீண்டும் உயர்ந்து பவுன் ஒன்றுக்கு ரூ.32 ஆயிரத்து 200 ஆக இருந்தது.

இந்நிலையில், தங்கம் விலை கடந்த 4ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு 1,024 ரூபாய் அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 224 ஆக விற்பனையானது.  இதேபோன்று ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 153 ஆக இருந்தது.  இதனால் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.  கடந்த 11ந்தேதி ரூ.33,312க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கம் விலை கடந்த 14ந்தேதி பவுன் ஒன்றுக்கு ரூ.632 குறைந்து ரூ.31 ஆயிரத்து 472க்கு விற்பனை செய்யப்பட்டது.  இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்து ரூ.33 ஆயிரத்திற்கு மேல் சென்ற நிலையில், திடீரென அதன் விலை சரிந்து முதன்முறையாக ரூ.32 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு இன்று ரூ.980 குறைந்துள்ளது.  இதனால் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.30,560க்கும், ஒரு கிராம் ரூ.123 குறைந்து ரூ.3,820க்கும் விற்பனையாகி வருகிறது.  இதேபோன்று வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.38 ஆயிரத்து 100 ஆக குறைந்துள்ளது.

Next Story