வாலிபர்களுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது


வாலிபர்களுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 March 2020 11:00 PM GMT (Updated: 18 March 2020 12:21 AM GMT)

குடியாத்தத்தில் வாலிபர்களுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம், 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மேலும் இது சம்பந்தமான வதந்திகளும் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரணாம்பட்டு ரோடு நாராயணசாமி தோப்பு பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களின் புகைப்படங்களை தனித்தனியாக வைத்து செய்தி சேனல்களில் வருவதுபோல் பிரேக்கிங் நியூஸ் போட்டு அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாகவும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் வாட்ஸ்அப், முகநூலில் பரவியது.

இதனை பார்த்து பாதிக்கப்பட்ட வாலிபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் குடியாத்தம் அரசு மருத்துவமனை சார்பிலும் இதுபோல் தவறான வதந்திகள் பரப்புவது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இந்த வீடியோ கிளிப்பிங் போலியாக தயார் செய்து அனுப்பியதாக சந்தேகத்தின்பேரில் பலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமார் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், யுவராஜ், தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ், ஏட்டு ராமு உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு போலியாக வீடியோ கிளிப்பிங் செய்தவர்கள் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமி அம்மன் தெருவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விஜயன் (வயது 19), காந்திநகரை அடுத்த ராஜா கோவில் கிராமத்தைச் சேர்ந்த செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ள சுகுமார் (19), செதுக்கரை பச்சையம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவகுமார் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் விஜயன் பாதிக்கப்பட்டவரின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் விளையாட்டாகவும், பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்புவதற்காகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 3 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் கூறுகையில் வாட்ஸ்அப்களில் வீண் வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

Next Story