மாநில செய்திகள்

அரசு உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு நிரந்தர ‘சீல்’ - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை + "||" + Permanent Seal to Companies Acting on Government Orders - Minister SP Velumani warns

அரசு உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு நிரந்தர ‘சீல்’ - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

அரசு உத்தரவை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு நிரந்தர ‘சீல்’ - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை
தமிழக அரசின் உத்தரவை மீறி நிறுவனங்கள் செயல்பட்டால் நிரந்தரமாக மூடி ‘சீல்’ வைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.
சென்னை, 

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, போலீஸ் துறை, தெற்கு ரெயில்வே மற்றும் இதர துறை அதிகாரிகளிடம் அவர்கள் துறைகளின் சார்பில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பது குறித்தும் அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள கிருமி நாசினி தெளிக்கும் எந்திரங்களையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் ஆலோசனைபடி தற்பொழுது உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டேன். வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நோய் அறிகுறிகள் இருந்தால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, கொரோனா வைரசை முறையாக சோப்பு உபயோகித்து கைகளை கழுவினாலே வராமல் தடுக்க முடியும். இதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் முறைப்படி கை கழுவும் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. அதிகமாக பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை வரும் 31-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி மேற்கண்ட நிறுவனங்கள் தமிழக அரசின் உத்தரவை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அந்த நிறுவனங்கள் நிரந்தரமாக மூடி ‘சீல்’ வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த புதிய நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் வரும் 31-ந் தேதி வரை நடைபெறுவதை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் பயணிக்கக் கூடிய பஸ், ரெயில்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகமாக பொது மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதை அந்தந்த நிறுவனங்கள் உறுதிபடுத்த வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் 3 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாநகராட்சியின் சார்பில் 46 கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களும், கைகளால் இயக்கும் 200 கிருமி நாசினி எந்திரங்களும், 200 ‘பவர் ஸ்ப்ரேயர்களும்’ கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக உள்ளாட்சி துறை இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி, கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் ஆர்.தினகரன், பிரேம் ஆனந்த் சின்ஹா, ஏ.அருண், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள் மதுசுதன் ரெட்டி, பி.என்.ஸ்ரீதர், பி.ஆகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.