‘சென்னை முழுவதும் மின்மாற்றிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறோம்’ - சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தகவல்


‘சென்னை முழுவதும் மின்மாற்றிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறோம்’ - சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தகவல்
x
தினத்தந்தி 17 March 2020 9:45 PM GMT (Updated: 17 March 2020 9:29 PM GMT)

‘சென்னை முழுவதும் மின்மாற்றிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறோம்‘ என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), முதல்-அமைச்சர் 110 விதியின்கீழ் அறிவித்த அறிக்கையிலேயே ஒட்டுமொத்தமாக சென்னையிலே இருக்கின்ற பில்லர்கள் பொருத்தப்பட்ட உயர் மின்னழுத்தமாற்றிகளை மாற்றி, ஆர்.எம்.யூ. என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்மாற்றிகள் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தீர்கள். துறைமுகம் தொகுதியில் 300 மின்மாற்றிகள் இருக்கின்றன. அந்த மின்மாற்றிகளை மாற்றி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்மாற்றிகளாக அமைத்து தரப்படுமா? என்று துணை கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி, ‘2017-ல் ஒப்பந்தம் கோரப்பட்டு, சிலர் நீதிமன்றம் சென்றார்கள். இப்பொழுதுதான் அந்த பணி முடிந்து, ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் ஒப்பந்தப் பணிகள் முடிந்து, பணிகள் துவங்கும். விரைந்து அந்தப் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.

தாம்பரம், சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் மின்மாற்றிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா (தாம்பரம்) வலியுறுத்தினார். இதற்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்து கூறியதாவது:-

சென்னை மாநகரம் முழுவதுமே, அதிகமான மின்தடங்களில் உள்ள மின்மாற்றிகளை மாற்றிக்கொண்டிருக்கிறோம். தாம்பரம் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட, 100 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளது. உறுப்பினர் கோரிய பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. பல்லாவரம் தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகத்தை 2 ஆக பிரிக்கும் நடவடிக்கையும் தொடங்க இருக்கிறோம்.

தாம்பரம் பகுதியில் மட்டும் 1,230 கிலோ மீட்டர் அளவுக்கு புதைவடதளமாக மாற்றுவதற்குண்டான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 353 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விரைந்து அந்தப் பணிகளை முடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றோம். பெருங்களத்தூர் பகுதியிலும் அடுத்த கட்டமாக அந்தப் பணிகளை மேற்கொள்ளவிருக்கின்றோம். தாம்பரம் பகுதியில் தாழ்வழுத்தக்கம்பிகள் இருந்தால் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story