மாநில செய்திகள்

தி.மு.க. குறித்து விமர்சனம்; கேள்வி நேரத்தில் கருணாஸ் பேச்சால் சலசலப்பு + "||" + DMK Criticism; Karunas talk at the time of questioning

தி.மு.க. குறித்து விமர்சனம்; கேள்வி நேரத்தில் கருணாஸ் பேச்சால் சலசலப்பு

தி.மு.க. குறித்து விமர்சனம்; கேள்வி நேரத்தில் கருணாஸ் பேச்சால் சலசலப்பு
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. குறித்து கருணாஸ் விமர்சனம் செய்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் உறுப்பினர் கருணாஸ் (திருவாடானை), கேள்வி கேட்பதற்கு முன்பாக கச்சத்தீவு தொடர்பாக தமிழக அரசை பாராட்டியும், தி.மு.க. குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். கருணாஸ் பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டு, சில வார்த்தைகளை பேசினர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது. பதிலுக்கு கருணாசும் சிலவார்த்தைகளை பேசினார். தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ணசாமி, கருணாசை நோக்கி ஆவேசமாக பேசினார். இதனால் அங்கு மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. கருணாசுக்கு ஆதரவாக ஆளுங்கட்சி வரிசையில் இருந்து குரல் கொடுக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், ‘உறுப்பினர்கள் அமைதிகாக்க வேண்டும். நான் அவைக்குறிப்பை படித்து பார்த்து விட்டு, அதை நீக்குவதா? வேண்டாமா? என்பது குறித்து முடிவு செய்வேன். எனவே நீங்கள் அமைதியாக இருக்கையில் அமருங்கள்’ என்றார். ஆனாலும் இரு தரப்பிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால் சுமார் 8 நிமிடங்களுக்கு கேள்வி நேரம் தடைபட்டது.

இதைத்தொடர்ந்து அவை முன்னவர் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து நின்று, ‘கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை கூற கூடாது. இதுதான் அவை மரபு. எனவே உறுப்பினர் கருணாஸ் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்றார். அதனை தொடர்ந்து கருணாஸ் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்பின்னர், கருணாஸ் பேச்சால் கேள்வி நேரத்தில் ஏற்பட்ட சலசலப்பு அடங்கி போனது.