டி.டி.வி.தினகரனிடம் ரூ.31 கோடி அபராதத்தை வசூலிக்கக்கோரி வழக்கு - பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


டி.டி.வி.தினகரனிடம் ரூ.31 கோடி அபராதத்தை வசூலிக்கக்கோரி வழக்கு - பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 March 2020 7:46 AM GMT (Updated: 18 March 2020 7:46 AM GMT)

டி.டி.வி.தினகரனிடம் ரூ.31 கோடி அபராதத்தை வசூலிக்கக்கோரி வழக்கில் பதில் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி.தினகரனுக்கு கடந்த 1998-ம் ஆண்டு ரூ.31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் டி.டி.வி.தினகரன் கடந்த 2000-ம் ஆண்டு செய்த மேல்முறையீட்டு வழக்கு 2017-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் செய்த மேல்முறையீட்டு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதனால் டி.டி.வி.தினகரனுக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குனர் விதித்த ரூ.31 கோடி அபராதம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அவரிடம் இருந்து இந்த அபராத தொகை வசூலிக்கப்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டும், அதை தர தகவல் ஆணையம் மறுத்துவிட்டது. இந்த அபராத தொகையை டி.டி.வி.தினகரனிடம் இருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கும்படி அமலாக்கத்துறைக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. டி.டி.வி.தினகரனுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. எனவே, அவரிடம் இருந்து ரூ.31 கோடி அபராதத்தை வசூலிக்க அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அமலாக்கத்துறை மற்றும் டிடிவி.தினகரன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Next Story