நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன்; முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதே மகிழ்ச்சி - முதல்வர் பழனிசாமி


நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன்; முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதே மகிழ்ச்சி - முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 18 March 2020 12:18 PM GMT (Updated: 18 March 2020 12:18 PM GMT)

நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன். முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சி என முதல்வர் பழனிசாமி கூறினார்.

சென்னை

சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்காக ஆந்திரா தெலுங்கானா முதலமைச்சர்களிடம் பேசியுள்ளோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்பட்டு பணிகள் துவங்கும்.  133 தடுப்பணைகள் கட்ட 692 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பரிட்சார்த்த முறையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளுக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் 2017 -18ம் ஆண்டில் 330 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 2018 -19ம் ஆண்டில் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

 முல்லைபெரியாறு அணை தொடர்பான பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும். அணை பிரச்சினையை தீர்ப்பதில், கேரள முதலமைச்சரும் ஆர்வமாக இருப்பதாக கூறினார். 

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், இந்த பிரச்சினைக்கு தீர்வு எட்டும் வரை, கேரள முதலமைச்சரை விடாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார். 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பேசும் போது  கூறியதாவது:-

நான் முதல்வர் அல்ல, மக்கள் சேவகன். முதல்வர் வாகனத்தில் செல்வதை விட மாட்டு வண்டியில் செல்வதுதான் எனக்கு மகிழ்ச்சி.

தமிழகத்தை நீர் மிகை மாநிலமாக மாற்றுவதே எனது லட்சியம்.

தருமபுரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.486 கோடி செலவில் நீரேற்று பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கூறினார்.

Next Story