கல்வி கட்டண நிர்ணய குழு தலைவராக நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு


கல்வி கட்டண நிர்ணய குழு தலைவராக நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 18 March 2020 8:45 PM GMT (Updated: 18 March 2020 5:12 PM GMT)

கல்வி கட்டண நிர்ணய குழு தலைவராக நீதிபதி கே.வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, 

தனியார் சுயநிதி தொழில் கல்வி நிறுவனங்கள், மாணவர்களிடம் வசூலிக்கவேண்டிய கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒவ்வொரு மாநில அரசும் குழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் கல்வி கட்டண குழு அமைக்கப்பட்டது.

முதலில் இந்த குழுவின் தலைவராக, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ராமன் நியமிக்கப்பட்டார். பின்னர் இந்த குழு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அப்போது தலைவராக ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென காலமானார்.

இதையடுத்து, இந்த குழுவின் தலைவர் பதவி காலியாக இருந்தது. புதிய தலைவரை நியமிக்க உயர் கல்வித்துறை முடிவு செய்தது. இதற்காக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஆலோசனை செய்து, கல்வி கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Next Story