டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளை தடுக்க ரூ.5 கோடியில் நவீன தொழில்நுட்பம் - சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு


டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளை தடுக்க ரூ.5 கோடியில் நவீன தொழில்நுட்பம் - சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 March 2020 10:00 PM GMT (Updated: 18 March 2020 10:02 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க ரூ.5 கோடியில் நவீன தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்த துறைகளின் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்து பேசினார்.

பின்னர் அவர் வெளியிட்ட அந்தத்துறைகளுக்கான புதிய அறிவிப்புகள் வருமாறு:-

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோருவதை எளிமையாக்கும் வகையில், தகவல் கோரும் விண்ணப்பங்களையும், மேல்முறையீட்டு மனுக்களையும் இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதி இந்த நிதியாண்டில் இருந்து படிப்படியாக ஏற்படுத்தப்படும்.

சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்கள், அக்குழந்தைகளின் நலனை பராமரிக்க மேற்கொள்ளும் சிரமத்தைக் குறைப்பதற்காக, அக்குழந்தைகளின் பெற்றோர்களான அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும்.

சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள், காவல் துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் மழலையர்களை அலுவல் நேரத்தில் கவனித்துக்கொள்வதற்காக புதிய மழலையர் காப்பகம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் பாதுகாப்பு வசதியை பலப்படுத்துவதற்காக விரல் ரேகைப்பதிவு, ஜி.பி.எஸ்., கண்காணிப்பு கேமரா, ஜாமர் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த ரூ.5 கோடி நிதி வழங்கப்படும்.

புயல் மற்றும் சீரற்ற வானிலைகளின்போது ஆழ்கடல் மீன்பிடிப்பில் இருக்கும் விசைப்படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஆபத்து காலங்களில் கரையில் உள்ளவர்களை தொடர்பு கொள்வதற்காக 75 சதவீதம் மானியத்தில் 500 ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள 10 மீன்பிடி துறைமுகங்களில் 40 பனிக்கட்டி நொறுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும். ஆயிரம் பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு அலகு ஒன்றுக்கு 40 சதவீதம் அல்லது ரூ.48 ஆயிரம் மானியத்தில் வெளிப்பொருத்தும் அல்லது உள்பொருத்தும் எந்திரங்கள் வழங்கப்படும். இறால் வளர்ப்பு பண்ணைகளில் நாற்றங்கால்கள் அமைக்க, அலகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வீதம் மானியம் வழங்கப்படும்.

மீன்பிடி தடைக்காலங்களில் விசைப்படகுகளின் மராமத்து மற்றும் பராமரிப்புச் செலவீனங்களுக்காக குறுகிய காலக்கடன் ஏற்பாடு செய்யப்படும். மீனவர் நலவாரியத்தின் உறுப்பினர்களாக உள்ள மீனவ பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.

மீன் உணவின் முக்கியத்துவத்தை உணர்த்த சென்னையில் மீன் திருவிழா நடத்தப்படும். காஞ்சீபுரம், கன்னியாகுமரி, திருவள்ளூர், நாகை மாவட்டங்களில் மீன் வளர்ப்பு மற்றும் மீன்பதன தொழில்நுட்ப வர்த்தக காப்பகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

Next Story