சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையில் ரூ.500 கோடியில் 5 மேம்பாலங்கள் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையில் ரூ.500 கோடியில் 5 மேம்பாலங்கள் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 March 2020 4:22 AM GMT (Updated: 19 March 2020 4:22 AM GMT)

சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையில் ரூ.500 கோடி செலவில் ஐந்து சந்திப்புகளில் 5 மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் பலர் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதிலுரை வருமாறு:-

தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமையை மத்திய அரசிடம் பெற்றுள்ளது. இப்பெருமையை பெற்றதற்கு சிறப்பான சாலை உள்கட்டமைப்பும் ஒன்றாகும்.

தமிழ்நாட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நெடுஞ்சாலைத்துறை 66 ஆயிரத்து 39 கி.மீ. நீளச்சாலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சாலை வசதியில் தமிழகத்திற்கு ஈடு இணை எந்த மாநிலமும் இல்லை என்பதை இங்கே பயணப்பட்ட பலர் தெரிவித்துள்ளனர். இங்கு குக்கிராமத்திற்குக்கூட சிறப்பான சாலை வசதிகள் உண்டு.

2019-2020-ம் ஆண்டு ரூ.1,039.78 கோடி மதிப்பில் 3,597.20 கி.மீ. நீளசாலைகளின் ஓடுதளப்பாதையின் தரத்தை மேம்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

2014-15-ம் ஆண்டு முதல் சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.700 கோடி மதிப்பிலும், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.1,486 கோடி மதிப்பில் சாலை பாதுகாப்பு பணிகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தற்போது சாலை விபத்துகள் மற்றும் உயிர் இழப்புகளின் சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது.

தாம்பரம் முதல் கூடுவாஞ்சேரி வரை உள்ள சாலை மற்றும் வானகரம் - ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள சாலை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பில் இருந்தாலும், மாநில அரசு அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தற்போது 8 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும் வகையில் கோயம்பேடு காளியம்மன் கோவில் மேம்பாலம், பல்லாவரம் மேம்பாலம், திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலை உயர்மட்டப் பாலம், கொளத்தூர் இரட்டை ஏரி மேம்பாலம் (வலதுபுறம்), கொரட்டூர் வாகன சுரங்கப்பாதை, தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம், கீழ்கட்டளை மேம்பாலம், மேடவாக்கம் மேம்பாலம் மற்றும் வேளச்சேரி ஆகிய 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படவுள்ளன.

சென்னை எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்ப்பதற்காக எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கி பூஞ்சேரி சந்திப்பு வரை 133 கி.மீ. நீளத்தில் சென்னை எல்லை சாலை அமையவுள்ளது. இதில் 97 கி.மீ. புதிய சாலையாகவும், 36 கி.மீ. தற்போதுள்ள சாலைகளை மேம்படுத்தும் வகையில் பணிகள் 5 பிரிவுகளாக செயலாக்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்காக அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

* சென்னை எல்லை சாலையின், நான்காம் பகுதியான ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கபெருமாள் கோயில் வரையுள்ள பகுதியில் வாகன சுரங்கப்பாதைகள், சாலை சந்திப்பு மேம்பாடு, சாலை பாதுகாப்பு ஆகிய பணிகள் உலகத்தரத்துடன் ரூ.531 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

* சிறுசேரி முதல் மாமல்லபுரம் வரையுள்ள 14.8 கி.மீ நீளச்சாலை, சேவை சாலைகளுடன் கூடிய 6 வழிச்சாலையாக ரூ.350 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும்.

* சென்னை பெருநகரம் மற்றும் புறநகரங்களில் வெள்ள பெருக்கினால் சாலையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க புதிய வடிகால் மற்றும் சிறுபாலங்கள் ரூ.277 கோடி மதிப்பில் கட்டப்படும்.

* சென்னை வெளிவட்ட சாலை உடன் இணையும் 12 சாலைகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த முதற்கட்டமாக, நிலத்தொகுப்பு முறையில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* சென்னை தகவல் தொழில்நுட்ப சாலை யின் பிரதான 5 சந்திப்புகளில் ரூ.500 கோடி மதிப்பில் 5 மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

* சென்னையின் மூன்று பிரதான சாலைகளை சீர்மிகு சாலைகளாக அமைக்கும் பணிக்கு விரிவான திட்ட அறிக்கை மற்றும் அண்ணாசாலையில் முத்துசாமிபாலம் முதல் தாம்பரம் வரை மற்றும் தாம்பரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை மாற்று வழி அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். மேலும் வண்டலூர் சந்திப்பில் பாதசாரிகளுக்கான மேம்பாலம் ரூ.16.17 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

* சாலை பாதுகாப்புப் பணிகள் ரூ.400 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

Next Story