கொரோனா வைரஸ் பீதியால் சென்னை வந்து செல்லவேண்டிய 118 விமானங்கள் ரத்து


கொரோனா வைரஸ் பீதியால் சென்னை வந்து செல்லவேண்டிய 118 விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 19 March 2020 10:30 PM GMT (Updated: 19 March 2020 9:45 PM GMT)

கொரோனா வைரஸ் பீதியால் பயணிகள் வரத்து குறைவால் சென்னை வந்து செல்ல வேண்டிய 118 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.

ஆலந்தூர், 

சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. விமான பயணங்களால் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற பீதியால் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகள் குறைவு மட்டுமின்றி, சில நாட்டு பயணிகள் விமானம் இந்தியா வருவதற்காக தற்காலிகமாக மத்திய அரசு தடைவிதித்து உள்ளது.

இதனால் குவைத்தில் இருந்து வரவேண்டிய 3 விமானங்கள், இலங்கையில் இருந்து 4, மலேசியாவில் இருந்து 6, துபாயில் இருந்து 2, தாய்லாந்தில் இருந்து 2, தோகா, சிங்கப்பூர், பக்ரைன், ஜெர்மனி, லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து வரவேண்டிய விமானங்கள் உள்பட சென்னை வரவேண்டிய மொத்தம் 29 விமானங்களும், அதேபோல் சென்னையில் இருந்து மேற்கண்ட நாடுகளுக்கு செல்ல வேண்டிய 28 விமானங்களும் என 57 பன்னாட்டு விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு உள்ளன.

அதேபோல் சென்னையில் இருந்து ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, மும்பை, புனே, மதுரை, திருவனந்தபுரம், புவனேஸ்வர், திருச்சி, கொல்கத்தா, கோவா ஆகிய நகரங்களுக்கு செல்லவேண்டிய 28 விமான சேவைகளும், மீண்டும் அதே நகரங்களில் இருந்து திரும்பி சென்னை வரவேண்டிய 33 விமான சேவைகள் என உள்நாட்டு முனையத்தில் 61 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

ஒரே நாளில் 118 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையமே பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஏற்கனவே சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானம் வருவது நிறுத்தப்பட்டு உள்ளது. நேற்று முதல் ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ஐரோப்பிய யூனியன், துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பயணிகளை அழைத்து வரவேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சென்னைக்கு ஐக்கிய எமிரேட்ஸ், கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கட்டாயமாக 14 நாள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் நவீன கருவிகள் மூலம் தீவிர சோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக் கப்படுகிறார்கள். பன்னாட்டு முனையத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் முககவசங்கள் அணிந்தே பணியாற்றுகின்றனர்.

மேலும் விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் நடைமேடை, பயணிகள் வரக்கூடிய பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது.

Next Story