ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் - அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி


ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் - அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி
x
தினத்தந்தி 20 March 2020 7:01 PM GMT (Updated: 20 March 2020 7:01 PM GMT)

சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் தாயகம் கவி(திரு.வி.க.நகர் தொகுதி) பேசினார்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

உறுப்பினர் தாயகம் கவி:- 2020-21-ம் ஆண்டு சட்டத்துறை கொள்கை விளக்க குறிப்பில் பக்கம் 12-ல் திருச்சி சட்டக்கல்லூரியில் மாணவர்கள் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2016, 2017, 2018, 2019-ம் ஆண்டு கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்திலும் இதே செய்தி, ஒரே பல்லவியாக பாடிக்கொண்டிருக்கிறது. திருச்சி சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதி அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா? தமிழகத்தில் இப்போது புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய மாவட்டங்களில் மாவட்ட நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இன்னும் அது ஏற்படுத்தி தரவில்லை.

சட்டமன்றத்தில் 6-12-2006 அன்று சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், 11-10-2012 அன்று நடந்த உச்சநீதிமன்ற முழு நீதிமன்ற கூட்டத்தில் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று நீதி நிர்வாகம் கொள்கை விளக்க குறிப்பு புத்தகம் பக்கம் 38-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டே ஏற்றுக்கொள்ளப்படாததை, கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையின்போது, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக அறிவிக்க தொடர்ந்து அரசு வலியுறுத்தும் என்று பேசினார்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஐகோர்ட்டுகளில் பிராந்திய மொழி வழக்காடு மொழியாக உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை 2006-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியபோது, மத்திய காங்கிரஸ் கூட்டணியில் நீங்கள்(தி.மு.க.) இருந்தீர்கள். 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்க நீங்கள் வலியுறுத்தவில்லை.

பின்னர், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகுதான் மத்திய அரசை வலியுறுத்தினார். ஆனால், இந்த கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு 2 முறை நிராகரித்தது. அந்த நேரத்தில், மத்திய ஆட்சியில் நீங்கள் தான் அங்கம் வகித்தீர்கள். ஏன் நீங்கள் கோரிக்கை வைக்கவில்லை? ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும்.. மீண்டும்.. வலியுறுத்தப்பட்டு வந்தது. கடந்த 3-ந் தேதி கூட இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உறுப்பினர் தாயகம் கவி:- தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக, கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் பக்கம் 67, 69, 71 ஆகியவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 160 உரிமையியல் வழக்குகளும், 20,319 குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

இதேபோல், மதுரையில் உள்ள சென்னை ஐகோர்ட்டு கிளையில் 74,819 உரிமையியல் வழக்குகளும், 7,415 குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் மொத்தம் 14 லட்சத்து 10 ஆயிரத்து 406 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு நிலுவையில் இருப்பதால் மக்கள் வெறுப்படைகின்றனர். இதனால், மக்கள் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே, நீதித்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பல்வேறு வழக்குகள் குறித்து விசாரிப்பதற்காக பல ஆணையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அந்த ஆணையங்களின் நிலை என்ன?.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- 2 ஆணையங்கள் விசாரணையை முடித்து அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துவிட்டன. மற்றொரு ஆணையம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. உங்கள்(தி.மு.க.) ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், எத்தனை ஆண்டு களில் அறிக்கையை தாக்கல் செய்தது?

உறுப்பினர் தாயகம் கவி:- சென்னை, மதுரை ஐகோர்ட்டில் பணிபுரியும் பணியாளர்களுக்கு டெல்லி ஐகோர்ட்டு போல ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அது தொடர்பான வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யாமல், ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.

அதேபோல், வக்கீல்களின் சேம நலநிதியை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில், சிறை வளாகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, சிறைச்சாலைகளில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக வக்கீல்கள் மட்டும் உரிய கட்டுப்பாடுடன் அனுமதிக்கப்படுகிறார். அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story