கொரோனா தடுப்புக்கு சிறப்பான நடவடிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு


கொரோனா தடுப்புக்கு சிறப்பான நடவடிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 22 March 2020 12:15 AM GMT (Updated: 21 March 2020 10:36 PM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் சிறப்பான நடவடிக்கை எடுத்து வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாகவே பல்வேறு ஆய்வு கூட்டங்களை நடத்தி பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும், அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார்.

தொடர்ந்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடக மற்றும் ஆந்திர மாநில சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மூலம் நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் வாழ்த்து

இந்தநிலையில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று காலை தொலைபேசி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்ததோடு, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து நாளை (இன்று) பிரதமர் அறிவித்த 9 அம்சங்களும் தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story