‘ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்’ நடிகர்கள் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் வேண்டுகோள்


‘ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம்’ நடிகர்கள் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 March 2020 12:15 AM GMT (Updated: 21 March 2020 10:40 PM GMT)

ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-வது நிலையில் இருக்கிறது.

அது 3-வது நிலைக்கு போய்விட கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் நேரத்தில் இருக்கிற கொரோனா வைரஸ், 12-ல் இருந்து 14 மணி நேரம் பரவாமல் இருந்தாலே இதன் தாக்கம் 3-வது நிலைக்கு போகாமல் தடுத்திடலாம்.

டாக்டர்களுக்கு பாராட்டு

இத்தாலியில் இதேபோன்று அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவை மக்கள் உதாசீனப்படுத்தியதால்தான் அங்கு பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானது. அதுபோல ஒரு நிலைமை இந்தியாவில் நிகழ்ந்துவிடக்கூடாது. ஆக இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோருமே வருகிற இன்று நடைபெற உள்ள ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பை கொடுப்போம்.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தங்களது உயிரை பணயம் வைத்து வேலை செய்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு அவர்களை மனதார பாராட்டுவோம். அவர்கள் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டுவோம்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்

இதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு அதீத விழிப்புணர்வு தேவைப்படுற கட்டமான 4-வது வாரத்துல தமிழ்நாடு இப்போ இருக்கு. வீட்டில இருங்க. கூட்டம் கூடுற இடங்களுக்கு போறதை தவிர்த்திடுங்க. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளிய வாங்க. குடும்பத்தோட நேரத்தை செலவிடுங்க. மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட போனில் தினமும் பேசுங்க.

முன்னெச்சரிக்கை முக்கியம்

இந்த 2 வாரம் இத்தனை வருஷம் நீங்க தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை உங்க குழந்தைகள் கிட்ட சொல்லுங்க. பெரியவர்களோட நேரத்தை செலவிடுங்க. நீங்க விரும்பிய புத்தகம், படம் மற்றும் இசைக்கு நேரத்தை பயன்படுத்துங்க. கொரோனா பரவுவதை தடுக்க ஒரே வழி விலகி இருத்தல் ஆகும். எனவே பாதுகாப்பாக இருங்கள். நமக்கொன்றும் வராது என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையாலோ, அசட்டுத் தைரியத்தாலோ இந்த நோய் பரவ நாம் காரணமாக இருந்து விடக்கூடாது. முன்னெச்சரிக்கைத்தான் முக்கியமான விஷயம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story