சென்டிரல் ரெயில் நிலையத்தில் வடமாநிலத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


சென்டிரல் ரெயில் நிலையத்தில் வடமாநிலத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 March 2020 9:00 PM GMT (Updated: 22 March 2020 8:22 PM GMT)

‘தங்குவதற்கு இடம் கொடுங்கள்’ என போலீசாருடன் வாக்குவாதம் செய்து, வடமாநிலத்தவர்கள் சென்டிரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, 

மக்கள் ஊரடங்கு காரணமாக ரெயில் நிலையங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று ரெயில் நிலையத்துக்குள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

இதனால் சென்டிரல் ரெயில் நிலையம் வந்து, வடமாநிலங்களுக்கு செல்லும், ஆயிரக்கணக்கான வடமாநில பயணிகள் ரெயில் நிலையத்துக்கு வெளியே காத்து கிடந்தனர். முதலில் நேற்று ஒரு நாள் மட்டும் ரெயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்ததால், ஒரு நாள் முழுவதும் காத்திருந்து, மறுநாள்(இன்று) ரெயில் மூலம் சொந்த ஊருக்கு செல்லலாம் என அவர்கள் நினைத்திருந்தனர்.

ஆனால் நேற்று மாலை இந்த ரெயில் ரத்து 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வடமாநில பயணிகள் நேற்று திடீரென சென்டிரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ், ரெயில்வே போலீஸ் மற்றும் பூக்கடை போலீசார் என 200-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் வருகிற 31-ந்தேதி வரை உணவு மற்றும் தங்குவதற்கு இடம் கொடுங்கள் என போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வாகனம் மூலம் வடமாநிலத்தவர்கள் அனைவரையும் அருகில் உள்ள சமுதாய நலக்கூடம், மண்டபத்துக்கு அழைத்து சென்று தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

Next Story