கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் ஊரடங்கு; ஒட்டுமொத்த தமிழகமும் வீட்டுக்குள் முடங்கியது


கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் ஊரடங்கு; ஒட்டுமொத்த தமிழகமும் வீட்டுக்குள் முடங்கியது
x
தினத்தந்தி 22 March 2020 10:45 PM GMT (Updated: 22 March 2020 9:54 PM GMT)

கொரோனா பரவுவதை தடுக்கும் முயற்சியாக நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்றது. இதனால் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினார்கள். வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின.

சென்னை, 

மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம் முழுவதும், வருகிற 31-ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. எஸ்.எஸ். எல்.சி. தேர்வு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு, அரசு உத்தரவின் அடிப்படையில் மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “22-ந் தேதி (அதாவது நேற்று) ‘மக்கள் ஊரடங்கு’ கடை பிடிக்குமாறும், அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

பொதுவாக கொரோனா வைரஸ் 12 மணி நேரம் உயிர் வாழக்கூடியது என்று கண்டறியப்பட்டு இருப்பதால், 14 மணி நேரம் மக்கள் நடமாட்டம் இருந்தால், கொரோனா வைரஸ் அழிந்து விடும் நிலை ஏற்படும். இதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்பதால் ஊரடங்கை கடைபிடிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதை ஏற்று நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்றது. மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கை கடைபிடித்தார்கள். கொரோனாவை கட்டுப்படுத்தும் அரசின் நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் ஆதரவு அளித்தனர். தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான், ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம், அசாம் என்று அனைத்து மாநிலங்களிலும் மக்கள் கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.

மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை கடைபிடித்ததையொட்டி நேற்று நாடு முழுவதும் பஸ், ரெயில் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவே இயக்கம் இன்றி முடங்கியது.

நெருக்கடி என்று வரும் போது 135 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டு ஓரணியில் திரள்வார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அரசின் முயற்சிக்கு மக்கள் உறுதுணையாக நின்றனர்.

தமிழகத்தில், மக்களின் முழுஆதரவுடன் சுய ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றது. ஊரடங்கையொட்டி நேற்று வீடுகளிலேயே அனைவரும் முடங்கினார்கள். யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அத்தியாவசிய பணிகளுக்காக ஒரு சிலர் மட்டுமே வெளியே சென்று வந்தனர்.

பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கியதால், தெருக்களில் கூட மக்கள் நடமாட்டத்தை காணமுடியவில்லை. டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்தவாறு பொழுதை போக்கினர். கோவில்களில் காலையிலேயே பூஜைகள் முடிக்கப்பட்டு நடை சாத்தப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டிருந்தால், தேவாலயங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மசூதிகளும் மூடப்பட்டிருந்ததால், கூட்டம் இல்லை.

பெட்டிக்கடை முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், எங்கும் அமைதி நிலவியது.

பஸ்கள், கார்கள், ஆட்டோக் கள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின. ஒரு சில இருசக்கர வாகனங்களை தவிர சாலைகளில் பிற வாகனங்களை காண முடியவில்லை.

வாகன போக்குவரத்து இல்லாததால் சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலை, கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

அரசு பஸ்கள் ஆங்காங்கே உள்ள பணிமனைகளில் நிறுத்தப்பட்டதால், பரந்து விரிந்த கோயம்பேடு பஸ் நிலையம் காலியாக கிடந்தது. சாலைகளிலும் வாகனங்கள் செல்லாததால், எந்தவித இரைச்சல் இன்றி நகரமே அமைதியாக இருந்தது. இதனால் காற்று மற்றும் ஒலி மாசு நேற்று வெகுவாக குறைந்தது.

சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு தினமும் இயக்கப்படும் 64 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் 2 ரெயில் நிலையங்களும் பயணிகள் மற்றும் ரெயில்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று காலை ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய நேற்று காலை அதிக அளவில் பயணிகள் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் குறைந்த அளவு இயக்கப்பட்டன. அத்தியாவசிய பயணத்தை மேற்கொள்பவர்களுக்காக இந்த ரெயில்கள் இயக்கப்பட்டாலும், குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தனர்.

சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய 224 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையமும் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தது.

சென்னையைப் போலவே கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களிலும், பிற ஊர்களிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் ஊரடங்குக்கு முழுஆதரவு அளித்தனர். கடைகள் அடைக்கப்பட்டு வாகனங்கள் ஓடவில்லை.

மொத்தத்தில், 14 மணி நேர ஊரடங்கு உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியதால், அரசின் முயற்சி வெற்றியடைந்தது.

Next Story