வெளிநாடுகளில் இருந்து திரும்பி சுய தனிமைப்படுத்துதலை தவிர்க்கும் நபர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும்; அமைச்சர் விஜயபாஸ்கர்


வெளிநாடுகளில் இருந்து திரும்பி சுய தனிமைப்படுத்துதலை தவிர்க்கும் நபர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும்; அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 23 March 2020 9:50 AM GMT (Updated: 23 March 2020 9:50 AM GMT)

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின் சுய தனிமைப்படுத்துதலை தவிர்க்கும் நபர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை நேற்று நள்ளிரவு முதல் வரும் 31ந்தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.  கொரோனா வைரஸ் எதிரொலியாக சென்னையில் வருகிற 31ந்தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை முழுவதும் நிறுத்தப்படுகிறது.  எனினும், சரக்கு ரெயில் சேவை வழக்கம் போல் செயல்படும் என்றும் இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் நபர்களாலேயே ஏற்படுகிறது என்றும் அவர்களால் மற்றவர்களுக்கும் நோய் தொற்று பரவுகிறது எனவும் கூறப்படுகிறது.

நாட்டில் வைரஸ் பாதிப்புக்கு பலியான 2வது நபரான டெல்லியை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிக்கு வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய அவரது மகனாலேயே ஏற்பட்டது.  அவரது மகன் சுய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், அந்த பெண்மணி சிகிச்சை பலனின்றி பலியானார்.  இந்நிலையில், தமிழகத்தில் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதுபற்றி தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்பொழுது, வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் சுய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டும்.  இதனை தவிர்த்து விட்டு வெளியே சுற்றும் நபர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.  அதனுடன் அவர்களின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளார்.

Next Story