ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லம் ஆவது எப்போது? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்


ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லம் ஆவது எப்போது? - அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்
x
தினத்தந்தி 23 March 2020 10:15 PM GMT (Updated: 23 March 2020 9:37 PM GMT)

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம் தொகுதி), “மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை விரைவில் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்” என்றார்.

அதற்கு பதில் அளித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த புனித இல்லமான வேதா நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 17-8-2017 அன்று அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். அந்த இல்லம் அமைந்திருக்கும் மொத்த பரப்பளவு 10 கிரவுண்ட் 322 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அரசுக்கு ஒப்படைக்க சென்னை மாவட்ட கலெக்டருக்கு நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக, தங்கவேலு மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோரால் தொடரப்பட்ட வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இதுதவிர, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தமிழ்நாட்டின் பேராட்சியருக்கு ஆட்சி உரிமை ஆவணம் வழங்கக் கோரி புகழேந்தி என்பவரால் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்குகள் விரைவாக முடிக்கப்படுகின்ற நேரத்திலே, உறுப்பினர் மட்டுமல்ல, தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முதல்-அமைச்சர் நிச்சயமாக விரைவிலேயே வேதா நிலையம் அரசின் ஆணைகளைப் பெற்று நினைவிடமாக அமைக்கப்படுகின்ற நல்ல தகவலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story