கொரோனா நோய் தடுப்பு பணிக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கொரோனா நோய் தடுப்பு பணிக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 March 2020 10:30 PM GMT (Updated: 23 March 2020 9:55 PM GMT)

கொரோனா நோய் தடுப்பு பணிக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்வதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை, 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு போர்க்கால அடிப்படையில் எடுத்துவரும் அதே நேரத்தில், இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான கூடுதல் வசதிகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்திட தேவையான திட்டங்களையும் முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.

முதற்கட்டமாக, அரசு மருத்துவமனைகளில் தற்போதுள்ள 92,406 உள்நோயாளி படுக்கை வசதிகளில், 9,266 படுக்கைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படும்.

தனியார் மருத்துவமனை நிர்வாகங்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளிலும், ஏற்கனவே இருக்கக் கூடிய படுக்கை வசதிகளில் 750 படுக்கை வசதிகள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி படுக்கை வசதிகளாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது பொது சுகாதார சட்டம் 1939-ன் விதி 41, 43, 44-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், அதற்கான அறிகுறிகள் தென்பட்டு, வேலை செய்யும் இடத்திலோ, விடுதியிலோ, வீட்டிலோ இருந்தால், அவரைப் பற்றிய தகவல்களை அருகாமையில் உள்ள சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அல்லது 24 மணி நேர மாநில கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை உடனுக்குடன் எற்கனவே அறிவிக்கப்பட்ட தொடர்பு எண்ணிலும் (04429510500, 29510400 மற்றும் கைபேசி எண்.94443 40496, 87544 48477 மற்றும் இலவச சேவை எண்.1800 120 555550) ஆகிய மையங்களில் உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மேலாளர், விடுதி உரிமையாளர் மற்றும் குடும்பத் தலைவர் ஆகியோரின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பல உத்தரவுகளை நான் வழங்கியுள்ளேன்.

* வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்கனவே பயணம் செய்தவர்களின் வீட்டுக் கதவில், “வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்” என்ற விவரம் ஒட்ட வேண்டும்.

* வெளிநாடு பயணித்தோர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தோர் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து, சமுதாயத்தின் நலன் கருதி, சுய தனிமைப்படுத்துதல் மூலம், அவர்கள் யாரும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.

* தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மருத்துவ சேவைக்கென, 25 சதவீதம் ஒதுக்க வேண்டும்.

* அத்தியாவசியப் பொருட் கள் வினியோகம் செய்யப் படும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் அங்காடிகள் போன்ற இடங்களில் தூய்மையைப் பராமரிப்பதை, உள்ளாட்சி அமைப்புகள் முறையாக கண்காணித்து, தூய்மைப்படுத்த வேண்டும்.

* சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களை வைத்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். எனினும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை தயார் செய்யும் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது.

* மக்கள் இந்த சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து முழு மனதோடும், மன உறுதியோடும் தமிழ்நாடு அரசோடு தோளோடு தோள் நிற்க வேண்டும். அனைவரும், குறிப்பாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள், முழுமையான தகவல்களை சுகாதாரத்துறைக்கு அளித்து முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ராணுவம், விமான நிலையம், ரெயில்வே துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்களும், தங்களை இதில் ஈடுபடுத்திக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு அரசுக்கு துணை நின்று, முழு மூச்சோடு இந்த கொரோனா வைரஸ் தடுப்புப் பணியிலே ஈடுபடுத்தி கொண்டுள்ளார்கள். மேலும், இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு முதற்கட்டமாக ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், அதை கூடுதலாக்கி இப்பொழுது ரூ.500 கோடி கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story