கொரோனா - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பொதுமக்களுக்கு அறிவுரை


கொரோனா - தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பொதுமக்களுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 24 March 2020 5:30 AM GMT (Updated: 24 March 2020 5:30 AM GMT)

அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு கூட்டம் கூட்டமாகச் செல்லக் கூடாது என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று (மார்ச் 23) சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதனை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார்.

தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அனைவரும் சமுதாய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வாங்க ஒரே இடத்தில் கூடாதீர்கள்.

முதல் கட்டமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இது வெற்றியடைந்தால் அனைத்துப் பகுதிகளிலும் இதனை நடைமுறைப்படுத்துவோம்.

இருமல் உள்ளவர்களுடன் இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். கைகளை அடிக்கடி கழுவுங்கள். முடிந்தவரை அனைவரும் வீட்டிலேயே இருங்கள். தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. 

அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்திருக்கும். அங்கும் ஒரே நேரத்தில் கூட்டமாக செல்லக்கூடாது. ஒரு நேரத்தில் அதிகபட்சம் 10 பேர் செல்லலாம்.

வெளிநாடுகளிலிருந்து வந்த சுமார் 10 ஆயிரம் பேரை தனிமைப்படுத்தியுள்ளோம். அவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளோம். கார், ரயில் மூலமாக வந்தவர்களின் பட்டியலையும் தயார் செய்துள்ளோம். 

அதில், யார் யார் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் பட்டியலை அளித்துள்ளோம். பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறை இருக்கிறது. எந்தப் புகாராக இருந்தாலும் கொடுங்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story