தமிழகத்தில் தடை காலத்தில் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கப்படும் என அறிவிப்பு


தமிழகத்தில் தடை காலத்தில் வாரியம் சார்பில் குடிநீர் வழங்கப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 24 March 2020 12:58 PM GMT (Updated: 24 March 2020 12:58 PM GMT)

தமிழகத்தில் தடை காலத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 492 ஆக அதிகரித்து உள்ளது.  இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  நாடு முழுவதற்கும் ரெயில் சேவை வருகிற 31ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன.  பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.  நாட்டில் இதன் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமலாகிறது.  இதனை அடுத்து, உணவு, பால், மருந்து உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு உள்ள காலத்திலும் பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் வாரியம் சார்பாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

அனைத்து பகுதிகளிலும் குறைபாடு இன்றி உடனுக்கு உடன் குடிநீர் வழங்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று குறைகளை சரி செய்வார்கள் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Next Story