சட்டசபை, மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


சட்டசபை, மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 March 2020 10:45 PM GMT (Updated: 24 March 2020 10:40 PM GMT)

சட்டசபை, மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்திற்கு இடையே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு தற்போது ரூ.2 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அது 1-4-2020 முதல் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். சட்டப்பேரவை, மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.20 ஆயிரம் 1-7-2017 முதல் வழங்கப்பட்டு வருகிறது. அது 1-4-2020 முதல் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5 கோடியே 47 லட்சத்து 20 ஆயிரம் கூடுதல் செலவினம் ஏற்படும்.

சட்டமன்றப் பேரவை, மேலவை முன்னாள் உறுப்பினர்களின் சட்டமுறை வாரிசுதாரர்களுக்கு மாதக் குடும்ப ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் 1-7-2017 முதல் வழங்கப்பட்டு வருகிறது. அது 1-4-2020 முதல் ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1 கோடியே 21 லட்சத்து 80 ஆயிரம் கூடுதல் செலவினம் ஏற்படும். ஒவ்வொரு நிதியாண்டிலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 1-7-2018 முதல் ரூ.30 ஆயிரம் மருத்துவப்படி வழங்கப்பட்டுவருகிறது. அது 1-4-2020 முதல் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1 கோடியே 82 லட்சத்து 40 ஆயிரம் கூடுதல் செலவினம் ஏற்படும்.

சட்டமன்ற மேலவை, பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு 1-3-1995 முதல் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழக பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதற்கு முன்னாள் உறுப்பினர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டது. உறுப்பினர்கள் 1-4-1997 முதல் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான அனைத்து போக்குவரத்துக் கழக பஸ்களில் உறுப்பினர்கள் தனியாகவோ, வாழ்க்கைத் துணையுடனோ அல்லது உதவியாளர்களுடனோ இலவச பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

தற்போது குளிர்சாதன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்களில் பயணம் செய்ய தங்களை அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் இதே கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது. எனவே, அவர்களது கோரிக்கைகளை ஏற்று, இனி படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும், அவர்களது வாழ்க்கைத் துணை அல்லது உதவியாளர்கள் குளிர்சாதன இருக்கைவசதி கொண்ட பஸ்களில் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story