காணொலி காட்சி மூலம் பத்திரிகை அதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் - ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பங்கேற்பு


காணொலி காட்சி மூலம் பத்திரிகை அதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் - ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பங்கேற்பு
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 11:49 PM GMT)

காணொலி காட்சி மூலம் பத்திரிகை அதிபர்களுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று கலந்துரையாடினார். இதில், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பங்கேற்று பேசினார்.

சென்னை, 

பிரதமர் நரேந்திரமோடி நேற்று காணொலி காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் நாடு முழுவதும் உள்ள 23 முக்கிய பத்திரிகை அதிபர்களுடன் கலந்துரையாடினார். கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், பத்திரிகைகள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்ற நோக்கில் அவர் இந்த கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதில் தைனிக் பாஸ்கர் பத்திரிகை சார்பில் சுஜித் அகர்வால், ‘தினத்தந்தி’ சார்பில் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘மாலை மலர்’ இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், ‘தந்தி’ டி.வி. இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், இந்து பத்திரிகை சார்பில் மாலினி பார்த்த சாரதி, என்.ரவி, தினமலர் சார்பில் கே.ராமசுப்பு, ஆந்திர ஜோதி சார்பில் ராதாகிருஷ்ணன், ஈநாடு சார்பில் ராமோஜி ராவ், ராஜஸ்தான் பத்திரிகா சார்பில் குலாப் கோத்தாரி, மலையாள மனோரமா சார்பில் மாம்மேன் மேத்யூஸ், ஜெயந்த் மேத்யூஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் விவேக் கோயங்கா, ஆனந்த் கோயங்கா, லோக் மத் சார்பில் ரிஷி டார்டா, விஜாவாணி சார்பில் ஆனந்த் சங்கேஷ்வர், தாரித்திரி சார்பில் ததகதா, சதபதி, சம்பாட் சார்பில் சவுமியா ரஞ்சன், பட்நாயக், சமாஜ் சார்பில் சுஜந்தா மொகந்தி, பஞ்சாப் கேசரி சார்பில் அவினாஷ் சோப்ரா, சங்கத் பிரதிதின் சார்பில் ஸ்ரீஞ்ஜாய் போஸ், சகால் சார்பில் அபிஜித் பவார், டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் ஜெய்திப் போஸ், பி.டி.ஐ. சார்பில் விஜய் ஜோஷி, டைனிக் ஜாகரான் சார்பில் சஞ்சய் குப்தா, இந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் ஷோபனா பாரதியா, நவபாரத் டைம்ஸ் சார்பில் முகமது நதீம், அமர் உஜாலா சார்பில் ராஜூல் மகேஷ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் பேசியவுடன், சில பத்திரிகை அதிபர்கள் பேச அழைக்கப்பட்டனர். ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர் பேசத்தொடங்கியபோது, வணக்கம் என்று தமிழில் கூறினார். உடனே பிரதமரும் வணக்கம்... வணக்கம்... பாலா என்று தமிழில் கூறி வணக்கம் தெரிவித்தார்.

அதன்பின் சி.பாலசுப்பிர மணியன் ஆதித்தன் பேசியதாவது:-

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் எங்களுக்குள்ள பொறுப்புகளை நன்றாக உணர்ந்து இருக்கிறேன். இதன் தீவிரத்தை, விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எங்களுக்குள்ள கடமையை நிறைவேற்ற அர்ப்பணிப்புள்ள நிருபர்கள், செய்தித்துறையினர் எங்களிடம் இருக்கிறார்கள். அவர்கள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள். இதற்கு இணையான அளவில் பத்திரிகையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை மேற்கொள்ளும் பத்திரிகை ஏஜெண்டுகள், விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள், வீடு வீடாக கொண்டுபோய் சேர்க்கும் பணியில் உள்ளவர்கள் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். எங்கள் பத்திரிகை விற்பனை உயர்ந்து இருக்கிறது. இதன் மூலம் மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அவர்களும் இதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

நாங்கள் ‘தினத்தந்தி’யில் கொரோனா பற்றிய தமிழ்நாடு செய்திகள், இந்திய செய்திகள், உலக செய்திகளை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்க தனியாக கூடுதல் பக்கங்கள் வெளியிடுகிறோம். இந்த மோசமான நிலை விரைவில் போய்விடவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் ‘தினத்தந்தி’யும், எங்கள் டி.வி.யான ‘தந்தி’ டி.வி.யும் செய்திகளை வெளியிடுகிறது. எங்கள் பத்திரிகை அச்சிடும் எங்கள் அச்சகத்தில் பத்திரிகை அச்சிட்டு வெளியிடும்போதே தேவையான கிருமி நாசினியை தெளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

எங்கள் பத்திரிகை கொரோனா ஒழிப்பு பணியில் அரசாங்கத்தோடு இணைந்து அர்ப்பணிப்போடு செயல்படுகிறோம். இந்த போரில் வெல்வதற்கு உங்களுக்கு உறுதுணையாக நிற்போம்.

மேற்கண்டவாறு சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசிவிட்டு, முடிக்கும்போது ‘வணக்கம்’ என்று கூறினார். உடனே, பிரதமர் நரேந்திரமோடி, ‘இது உங்கள் வீடு, வணக்கம் வணக்கம்’ என்று பதில் அளித்தார்.

Next Story