நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்துக்கு இடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு; விடைத்தாள் திருத்தும் பணி 7-ந்தேதி தொடங்குகிறது


நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்துக்கு இடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு; விடைத்தாள் திருத்தும் பணி 7-ந்தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 24 March 2020 11:15 PM GMT (Updated: 24 March 2020 11:59 PM GMT)

நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகத்துக்கு மத்தியில் பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றது. விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம்(ஏப்ரல்) 7-ந்தேதி தொடங்குகிறது.

சென்னை, 

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கியது. தேர்வு நடைபெற்று கொண்டு இருந்த நாட்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார்.

ஆனால் பிளஸ்-2, பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் பிளஸ்-1 தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதனால், பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் எழுந்தது. அதற்கு மத்தியில், அத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. நேற்று வேதியியல், கணக்கு பதிவியியல் தேர்வுகள் நடைபெற்றன. கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை கிருமிநாசினி திரவம் மற்றும் சோப்பு கொண்டு கைக்கழுவ அறிவுறுத்தப்பட்டனர்.

அதன்படி, மாணவ-மாணவிகள் கைகளை கழுவிய பிறகே தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று நடந்த வேதியியல், கணக்கு பதிவியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிந்துவிட்டதால், தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் தங்களுடைய சக நண்பர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். ஆனால் சில பள்ளிகளில், தேர்வு முடிந்ததும் மாணவ-மாணவிகளை உடனடியாக வீட்டுக்கு செல்ல ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.

தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 31-ந்தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருப்பதால், விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம்(ஏப்ரல்) 7-ந்தேதி தொடங்கும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விடைத்தாள் சேகரிப்பு மையம், மண்டல விடைத்தாள் சேகரிப்பு மையம் ஆகியவற்றில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் அரசு தேர்வுத்துறை கூறி இருக்கிறது.

Next Story