கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 24 March 2020 11:45 PM GMT (Updated: 2020-03-25T05:36:29+05:30)

கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பொறுத்தவரைக்கும் வேகமாக பரவக்கூடிய ஒரு நோய். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளதைப் போல, சுமார் 187 நாடுகளிலே இந்த நோய் பரவியிருக்கின்றது.

மாவட்ட எல்லைகள் மூடுவது மட்டுமல்ல, பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து தங்களை தனிமைப்படுத்தி இந்த நோயை தடுக்கின்ற பணிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லலாம். கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக டாக்டர்களை சந்தித்து, பரிசோதனை செய்து, அந்த நோயினுடைய தன்மையை அறிந்து, அவர்கள் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இது ஒரு கொடிய நோய், தொற்று நோய். ஆகவே, இந்த நோய் வந்தவர்கள் பிறரிடம் பேசுவதோ, தொடர்பு வைத்துக்கொள்ளவோ கூடாது. இது வேகமாக பரவக்கூடிய நோயாக இருக்கின்ற காரணத்தினாலே, அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நோய் வருவதற்கு உண்டான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவர்களை சந்தித்து, மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று குணமடையலாம். இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட நம்முடைய டாக்டர்கள் தகுந்த சிகிச்சை அளித்த காரணத்தினாலே அவர் குணமடைந்து இருக்கிறார்.

ஆகவே, பாதிக்கப்பட்டவர்கள் அச்சப்பட தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, டாக்டர்கள் நியமிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டில் இருந்து வருகின்றவர்களில் சில பேர் காய்ச்சலுக்காக இருக்கின்ற மாத்திரையை உட்கொள்வதன் காரணத்தினாலே இந்த பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்னும் சிலபேர் பெங்களூரூவில் இறங்கி, நமது மாநிலத்திற்கு வந்துவிடுகிறார்கள். அதோடு, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் இந்தியாவில் உள்ள பிற விமான நிலையங்களில் இருந்து இறங்கி நமது மாநிலத்திற்கு வந்துவிடுகிறார்கள். அவர்களை நாம் கண்டு பிடிக்க முடியவில்லை.

அப்படி வெளிநாட்டில் இருந்து விமானம் மூலமாக பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் வீட்டிலே இருந்தாலும் உடனடியாக அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு சென்று, தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்போடு அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனையிலே பணி புரியும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டு மருத்துவமனையிலே சிகிச்சை பெறுகின்றவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் இவர்கள் எல்லாம் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகின்றார்கள். அவர்கள் அனைவரையும் பாராட்ட நாம் கடமைப்பட்டு இருக்கின்றோம்.

மருத்துவப் பணி என்பது உன்னதப் பணி, மகத்தான பணி. அந்த மகத்தான பணியை சிரமேற்கொண்டு, அச்சம் இல்லாமல், நோய்வாய்ப்பட்டு இருக்கின்ற அந்த நபர்களுக்கு உரிய முறையிலே சிகிச்சை அளித்து, குணமடைய செய்து, இன்றைக்கு மகிழ்ச்சியோடு வீடு திரும்புகின்ற காட்சியை பார்க்க வேண்டும் என்பதற்காக, இரவு பகலாக பணியாற்றுகின்ற டாக்டர்களை நாங்கள் மனமார, உளமார பாராட்டுகின்றோம். அந்தப் பணியிலே ஈடுபட்டு இருக்கின்ற அனைவரையும் நாங்கள் பாராட்ட கடமைப்பட்டு இருக்கின்றோம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story