தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம் ஆகிறது - சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு


தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயம் ஆகிறது - சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 25 March 2020 12:09 AM GMT)

தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

* தமிழ்நாட்டின் 13 முக்கிய அரசு துறைகளின் அலுவலகங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பழமையான கட்டிடத்தின் பராமரிப்பு செலவு மிக அதிகளவில் ஏற்படுகிறது. எனவே அந்த இடத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும்.

* தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை மேம்படுத்த உலக தரம் வாய்ந்த உபகரணங்களை கொள்முதல் செய்ய ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்படும்.

* சாதாரண மக்களும் எளிதாக கையாளும் வகையில் இணையவழியாக நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் கிடைக்க வகை செய்ய ‘தமிழ் நிலம்’ என்ற ஒரு மென்பொருள் உருவாக்கப்படும். இதில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு நில ஆவணங்களை புதுப்பித்தல், இணையவழியாக சொத்து தொடர்பான வில்லங்க விவரங்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படும்.

* ரூ.40.96 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நவீன நில அளவை கருவிகளை கொண்டு நில அளவை பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் அறிவித்தார்.

Next Story