குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.1,000 எப்படி வழங்கப்படும்? - அதிகாரிகள் தகவல்


குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.1,000 எப்படி வழங்கப்படும்? - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 25 March 2020 8:48 PM GMT (Updated: 25 March 2020 8:48 PM GMT)

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் ரூ.1,000 எப்படி வழங்கப்படும் என்பதையும் அதிகாரிகள் கூறினார்.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்திலும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 எப்படி வழங்கப்படும்? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் சட்டசபையில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். எப்படி வழங்கப்படும் என்பதையும் அவர் கூறினார். அதேபோல், அட்டைதாரர்களுக்கு ஊழியர்கள் மூலம் டோக்கன் கொடுக்கப்படும். அதில் எந்த தேதியில்? எந்த நேரம்? வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டு இருக்கும். அட்டைதாரர்கள் அந்த தேதியில் வந்து பெற்று கொள்ளலாம்.

மேலும், ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் வரிசையில் நிற்க ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு அடையாளக்குறியிடவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.1,000 எப்போது வழங்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வரவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, ‘டோக்கன் கொடுத்து பணம் வழங்குவது எப்படி சாத்தியம் ஆகும்? என்பது தெரியவில்லை. ரூ.1,000 எப்போது வழங்குவது? எப்படி வழங்குவது? என்பது குறித்து இன்னும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. அரசு ரேஷன் கடை ஊழியர்களின் பாதுகாப்புக்கு எதுவும் செய்யவில்லை’ என்றனர்.

Next Story