மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் அறிவிப்பு; மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கிடையாது - 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி + "||" + Students have no year-end exams Until 9th grade All Pass

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் அறிவிப்பு; மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கிடையாது - 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து முதல்-அமைச்சர் அறிவிப்பு; மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு கிடையாது - 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது என்றும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சென்னை, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே 31-ந் தேதி வரை விடுமுறை அறிவித்தது. எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் அறிவித்தார்.

பின்னர் பிளஸ்-1 வகுப்புக்கான இறுதி நாள் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டது. எனினும் பிளஸ்-2 தேர்வு முழுமையாக நடந்து முடிந்தது.

ஆனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதி மற்றும் மூன்றாம் பருவத்தேர்வு நடத்தப்படுமா? அதற்கான தேதி எப்போது வெளியிடப்படும்? என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன.

குறிப்பாக புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களில் மேற்படி வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு நீடித்து வந்தது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தலைமைச் செயலாளர் க.சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர் கூட்டம் முடிந்ததும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் கடந்த 24-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வு நடந்தது. ஆனால் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் சில மாணவர்கள் அந்த தேர்வை எழுதச் செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்துக்கு கொண்டு வந்தார்கள். அதை கனிவோடு பரிசீலித்து அன்றைய தினம் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும், அந்த தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டு இருக்கிறேன்.

கொரோனா நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதித் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் இறுதித்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

இதன் காரணமாகவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வி துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். (இதனால் இந்த ஆண்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித் தேர்வு கிடையாது.)

டீக்கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதை தவிர்க்க, தமிழகம் முழுவதும் உள்ள டீக்கடைகள் இயங்குவதற்கு இன்று (நேற்று) மாலை 6 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடைவிதிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.