தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு
x
தினத்தந்தி 26 March 2020 12:40 PM GMT (Updated: 2020-03-26T18:10:21+05:30)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 21 நாட்கள் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.  விமான நிலையங்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 163 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. 15,298 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்த 43 பயணிகள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதுவரை 743 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் 608 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. 120 பேருக்கு முடிவுகள் இன்னும் வரவில்லை. தமிழகத்தில் கடந்த 23ந்தேதி 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் சென்னையில் மட்டும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.  இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருந்தது.

இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில், நேற்று வெளிவந்த பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக சேலத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

அந்த 5 பேரில், 4 பேர் இந்தோனேசியாவை சேர்ந்தவர்கள்.  ஒருவர் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர்.  கடந்த 22ந்தேதியில் இருந்து 5 பேரையும் தனிமைப்படுத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.  இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 23 ஆக உயர்ந்திருந்தது.  தொடர்ந்து 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு பாதிப்பு 26 ஆக உயர்ந்திருந்த நிலையில், துபாயில் இருந்து திருச்சி வந்த 24 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story