கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்


கொரோனா பாதிப்பு:  தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்
x
தினத்தந்தி 26 March 2020 3:33 PM GMT (Updated: 2020-03-26T21:03:22+05:30)

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல் ஆகியவற்றால் தமிழகத்தில் ஏப்ரல் 2 முதல் ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்திலும் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.  அட்டைதாரர்களுக்கு ஊழியர்கள் மூலம் டோக்கன் கொடுக்கப்படும். அதில் எந்த தேதியில்? எந்த நேரம்? வழங்கப்படும் என்பது தெரிவிக்கப்பட்டு இருக்கும். அட்டைதாரர்கள் அந்த தேதியில் வந்து பெற்று கொள்ளலாம்.

மேலும், ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் வரிசையில் நிற்க ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு அடையாளக்குறியிடவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு அமல் ஆகியவற்றால் தமிழகம் முடக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஏப்ரல் 2ந்தேதி முதல் ஏப்ரல் 15ந்தேதி வரை ரேஷன் கார்டுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.  ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

Next Story