கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை


கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்கு தலைவர்கள் நன்கொடை
x
தினத்தந்தி 26 March 2020 11:00 PM GMT (Updated: 26 March 2020 9:48 PM GMT)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு தீவிரமாக களமிறங்கி உள்ளது. இந்த பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

சென்னை, 

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

இதில் முக்கியமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.-எம்.எல்.ஏக்கள் ஆகியோர் தங்கள் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

மேலும், அ.தி.மு.க. எம்.பி.க்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடியையும், எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.25 லட்சத்தையும் வழங்குவார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.

வைகோ, கே.பாலகிருஷ்ணன்

இதைப்போல அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளுக்கு உதவியாக, தனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி வழங்குவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார்.

கொரோனா சிகிச்சை உபகரணங்களான வென்டிலேட்டர் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 1 கோடி ரூபாயை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்து உள்ளார்.

ஜி.கே.மணி, தொல்.திருமாவளவன்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு உதவும் வகையில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது மார்ச் மாத ஓய்வூதியத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள், முகக்கவசம் போன்றவை வாங்குவதற்கென சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரம் ஒதுக்கியுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து உள்ளார்.

Next Story