கொரோனா வைரஸ் அச்சம்: புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டுமான பணிகள் நிறுத்தம் - பொதுப்பணித்துறை நடவடிக்கை


கொரோனா வைரஸ் அச்சம்: புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டுமான பணிகள் நிறுத்தம் - பொதுப்பணித்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 26 March 2020 10:45 PM GMT (Updated: 26 March 2020 10:11 PM GMT)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக பொதுப்பணித்துறை செய்து வரும் கட்டிடப்பணிகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளன. வெளிமாநில பணியாளர்களும் கட்டுமானங்கள் நடக்கும் பகுதிகளிலேயே பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை, 

தமிழக பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் நீர்நிலைகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை பிரித்து செயல்படுத்தி வருகிறது. தற்போது கட்டுமான பிரிவு தமிழக அரசின் உத்தரவை ஏற்று புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டுமானம், பாரம்பரியமான கட்டிடங்கள் புனரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தது.

அதேபோல் நீர்நிலைகள் பராமரிப்பு பிரிவினர் நீர்நிலைகளில் இருந்து குடிநீருக்காக குடிநீர் வினியோகம், தண்ணீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பணிகளை மட்டும் கவனித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் கட்டுமானபணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

அதேபோல் குறைந்த எண்ணிக்கையில் அலுவலகங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். நீர்நிலைகள் பராமரிப்பு பிரிவினர் ஏரிகள் மற்றும் குளங்களையும் பராமரித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டிணம், திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, புதிய அரசு மருத்துவகல்லூரிகளுக்கு தமிழக அரசு நிதியை ஒதுக்கியுள்ளது. அதேபோல், மத்திய அரசும் முதற்கட்ட நிதியை ஒதுக்கியுள்ளது. அதற்கு பிறகு அனுமதி கிடைத்த மருத்துவ கல்லூரிகளையும் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அனுமதி கிடைத்த மருத்துவ கல்லூரிகளை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரி, மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகள் கட்டுவதற்கான ஆரம்ப கட்டபணிகளில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருகிறது. 18 மாதங்களில் கட்டி முடிப்பதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

மருத்துவ கல்லூரிகள் கட்டுமானப்பணிக்கான அடித்தளம் அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் தற்போது பணிகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டிடமான ஹூமாயுன் மகாலை சுமார் ரூ.30 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தபணியும் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்தபணிகளில் வெளிமாநில பணியாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கட்டுமானபணிகள் நடக்கும் பகுதிகளிலேயே தங்க வைக்கப்பட்டு, உணவு, தங்கும் இடம்போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.

கட்டுமான பணிகள் நடக்கும் பகுதியில் தங்கி இருக்கும் வெளிமாநில பணியாளர்கள் அந்தபகுதியில் இருந்து வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக வெளிமாநில பணியாளர்கள் தினசரி காலை மற்றும் மாலை இரண்டு வேளை குளிக்க வேண்டும். தங்கி இருக்கும் பகுதியை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்.

தேவைப்படும் வெளிமாநில பணியாளர்களுக்கு தினசரி உடல் வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை முறையாக கழுவவேண்டும். மருத்துவ தேவை ஏற்பட்டால் அதற்கு வேண்டிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. வெளிமாநில பணியாளர்களை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது. தினசரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றுவதற்காக வெறும் 5 சதவீத ஊழியர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதுவும் மாநகர பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டும் பணிக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் ஒருவருக்கொருவர் பேசவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி ஊழியர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுவதில்லை. வளாகத்தில் டீக்கடை உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டு உள்ளதால், ஊழியர்கள் தங்கள் பணிகளை மட்டும் கவனித்து வருகின்றனர். அதிகாரிகளும் தொலைபேசியில் உத்தரவுகளை பிறப்பிக்கிறோம். நோய் தடுப்பு பணியில் பொதுப்பணித்துறையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அலுவலக வளாகம் மற்றும் அலுவலக அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தேவையில்லாமல் வெளி ஆட்கள் அலுவலகத்துக்கு வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story