தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 4,100 பேர் மீது வழக்கு


தமிழகத்தில் தடை உத்தரவை மீறிய 4,100 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 27 March 2020 12:35 PM GMT (Updated: 27 March 2020 12:35 PM GMT)

தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறியதாக கூறி, 4 ஆயிரத்து 100 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தடையை மீறிய குற்றத்துக்காக நேற்று முன்தினம் மட்டும் தமிழகம் முழுவதும் 1,252 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதை மீறிய குற்றத்திற்காக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வதந்தி பரப்பியவர்கள் மீதும் 16 வழக்குகள் பதிவாகி உள்ளன.

சென்னையில் மட்டும் நேற்று தடையை மீறியதற்காக 279 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதற்காக 3 பேர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆயிரத்து 252 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று வழக்குப்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 100 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனா  அச்சுறுத்தலை தொடர்ந்து, அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்காணிக்க காவல்துறை சார்பில் ஆறு ஏ.டி.ஜி.பி. அதிகாரிகளை நியமித்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

Next Story