ரெயில்வே தொழிற்சாலைகளில் ஐ.சி.எப்.பில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்


ரெயில்வே தொழிற்சாலைகளில் ஐ.சி.எப்.பில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 27 March 2020 10:15 PM GMT (Updated: 27 March 2020 8:07 PM GMT)

சென்னை ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

இந்தநிலையில் ரெயில்வே ஊழியர்களின் பாதுகாப்புக்காக முக கவசம் தயாரிக்கும் பணியில் தெற்கு ரெயில்வே ஈடுபட்டு வருகிறது. திருச்சி, பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) இந்த பணி நடந்து வருகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ரெயில்வே ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரெயில்வே மருத்துவமனைகளிலும் கொரோனா தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட ‘வார்டாக’ மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடைகளில் முக கவசத்தின் விலை அதிகரித்து இருப்பதால், ரெயில்வே துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு குறைந்த விலையில் முக கவசங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். பெரம்பூரில் உள்ள ரெயில்வே பண்டகசாலையில், ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்களின் சீருடை தைத்து கொடுக்கப்படும். ஆனால் கொரோனா வைரஸ் எதிரொலியால் அந்த பணிகள் நிறுத்திவைக்கப்பட்டு, முக கவசம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

தரமான துணியால் முக கவசம் தயாரிக்கும் பணியில் ரெயில்வே பாதுகாப்புபடை பெண் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு 1,500 முக கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 6 ஆயிரம் முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த முக கவசங்கள் ரெயில்வே பணியாளர்களுக்கு வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். அதன் பிறகு பொது மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த பணியில் 14 ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி இருக்கைகளுக்கான, துணி தைக்கும் தொழிற்சாலையிலும் முக கவசங்கள் தயாரிக்கப்படுகிறது. இதேபோல் ரெயில்வே மருத்துவ துறை சார்பில், ஆய்வகங்களில் கை சுத்திகரிப்பான் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த முக கவசங்கள் மற்றும் கிருமி நாசினி சென்னை மண்டலம் மட்டும் அல்லாமல், தெற்கு ரெயில்வே முழுவதும் உள்ள ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் ரெயில்வே பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இதேபோல் திருச்சி பொன்மலை ரெயில்வே தொழிற்சாலை மற்றும் எர்ணாகுளத்தில் கிருமி நாசினி தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story