ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன? - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்


ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன? - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் விளக்கம்
x
தினத்தந்தி 27 March 2020 8:56 PM GMT (Updated: 27 March 2020 8:56 PM GMT)

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் மக்களுக்கு கிடைக்கும் பலன் என்ன? என்பது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் விளக்கம் அளித்தார்.

சென்னை, 

ரிசர்வ் வங்கி நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு குறித்தும், இதனால் மக்களுக்கு கிடைக்கும் பலன் குறித்தும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாசலத்திடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பொருளாதாரத்தில் பணப்புழக்கம் சற்று அதிகரிக்கும். ரிசர்வ் வங்கியில் ரொக்கமாக வைக்கும் இருப்புத் தொகையை 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைத்து இருக்கிறார்கள். அதனால் வங்கிகளிடம் ரூ.1 லட்சம் கோடி மிச்சம் ஆகும். அவற்றை ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டிய அவசியம் இல்லாததால், மக்களுக்கு அவர்கள் கடனாக வழங்கலாம்.

ரிசர்வ் வங்கியிடம் வாங்கும் கடனுக்கு வட்டியும் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே வங்கிகள் குறைந்த வட்டியில் ரிசர்வ் வங்கியிடம் குறுகியகால கடன் வாங்கலாம். வங்கிகளும் மக்களுக்கு குறைந்த வட்டியில் அவசர நேரத்தில் கடன் கொடுக்கலாம்.

3 மாதங்களுக்கு எல்லா கடன்களுக்கும் திருப்பி செலுத்தும் தவணைகளையும் ஒத்திவைத்து இருக்கிறார்கள். இதில் எல்லா கடன்களும் வரும். தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த 3 மாதங்களும், ஒவ்வொரு நபரும் கடன் தொகையை செலுத்துவதற்காக ஒப்புக்கொண்ட காலங்களின் இறுதியில் இந்த 3 மாதங்கள் நீட்டிக்கப்படும். இதற்கு வட்டிக்கு வட்டியும் வராது. ‘கிரெடிட் கார்டு’ கடனுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.

அதேபோல், உற்பத்திக்கு வாங்கும் செயல் மூலதனத்துக்கு வட்டியையும், மூலதனத்தையும் திருப்பி செலுத்தவில்லை என்றாலும் அது வராக்கடனாக அறிவிக்கப்படாது. வராக்கடனாக அறிவித்தால் ‘சிபில் ரேட்’ பாதிக்கப்படும். பின்னர் வங்கிகளில் கடன் வாங்க முடியாது. இப்போது அது வராது.

இந்த சலுகைகளை வைத்து சுகாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கும் சாதாரண மக்களுக்கும், துறைகளுக்கும் விரைவாக குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் திட்டங்களை ரிசர்வ் வங்கியும், வங்கிகளும் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story