சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்


சென்னை-நகரங்களில் ஊரடங்கை மீறி இறைச்சி -மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற கூட்டம்
x
தினத்தந்தி 29 March 2020 8:45 AM GMT (Updated: 29 March 2020 8:55 AM GMT)

சென்னை மற்றும் நகரங்களில் ஊரடங்கையும் மீறி இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற முறையில் மக்கள் கூட்டம் குவிந்தது.

 சென்னை

நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ரெயில், பஸ் என பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் சமூக விலகலை கடைபிடித்து மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இருப்பினும் பொதுமக்கள் சமூக விலகலை முழுமையாக கடைபிடிக்காமல் உள்ளனர். மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக காய்கறி கடைகள், மளிகை கடைகளில் கூடுகின்றனர். இந்த கடைகளில் நோய் தொற்று பரவாமல் தடுக்க ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறி ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் போலீஸார் கோலப்பொடியால் வட்டமிட்டுள்ளனர். இருப்பினும் அதையாரும் பின்பற்றுவதில்லை. பழையபடி கடைக்கு முன்பு ஒரே நேரத்தில் கூடி நின்றே பொருட்கள் வாங்குகின்றனர்.

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் முக்கிய நகரங்களில் இறைச்சிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இங்கும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று கறி வாங்க கட்டம் போட்டிருந்தாலும் அதை யாரும் மதிக்கவில்லை. கடையை மொய்த்தபடி நின்றே கறி வாங்கினர்.

அனைத்து கறிக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதேபோல் காய்கறி கடைகள், மளிகை கடைகளிலும் கூட்டம் இருந்தது.

காசிமேட்டில் அதிகாலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. நோய்த்தொற்று பரவாமல் இருக்க இடைவெளி கடைபிடிக்க வேண்டும், முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணிய வேண்டும் என்ற எவ்வித கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல், விற்பனை செய்வதிலேயே முழு கவனமாக இருந்து வருகின்றனர். காசிமேடு மீன் சந்தை, கட்டுப்பாடின்றி வழக்கம் போல் செயல்பட்டு வரும் நிலையில், 2 போலீசார் மட்டுமே பாதுகாப்பிற்கு இருப்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்

"சென்னையில் ஊரடங்கையும் மீறி இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கட்டுப்பாடற்ற முறையில் மக்கள் கூட்டம் குவிந்தது. இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கவலை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 17,668 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 11,565 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 14,815 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ரூ.4.80 லட்சம் அபராதம் வசூல்
செய்யப்பட்டு உள்ளது என காவல் துறையால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 ஊரடங்கை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

சென்னையில் ஊரடங்கு மீறல் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த அவர், ஊரடங்கை மீறி பொது இடங்களில் கூட்டம் சேருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.வெளிநாடுகளில் இருந்து வந்த 20 ஆயிரத்து 240 பேர் வீட்டுத் தனிமையில் கண்காணிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 1,120 பேர் 28 நாள் கண்காணிப்புக் காலத்தை நிறைவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். 19 ஆயிரத்து 120 பேர் இன்னும் தனிமைக் கண்காணிப்பில் இருப்பதாகவும், அக்கம்பக்கத்தினர் அவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


Next Story