அஞ்சலகம் மற்றும் வங்கிகள் மூலமாக உதவித் தொகை பெறுபவர்களுக்கு இருப்பிடத்திலேயே வழங்க நடவடிக்கை - அமைச்சர் தகவல்
அஞ்சலகம் மற்றும் வங்கிகள் மூலமாக உதவித் தொகை பெறுபவர்களுக்கு இருப்பிடத்திலேயே அந்த தொகை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர்.பி.உதய குமார் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு ஒவ்வொரு மாதமும் முதியோர்கள் தபால் துறை அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு சென்று அவர்களுக்கான தொகையை பெற்று வருவார்கள்.
இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலகட்டங்களில் முதியோர் உதவித் தொகை உள்பட பிற உதவித் தொகையை சம்பந்தப்பட்டவர்கள் பெறுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித் தொகைகள் அஞ்சலக மணியார்டர் மூலமாகவும் வங்கிக் கணக்கின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் 32 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகளுக்கு, ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் முதியோர்களை கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் அவர்கள் நலனை பேணவும் சிறப்பு ஏற்பாடாக பயனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக உதவித் தொகையினை தடையின்றி வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எனவே, அனைத்து மாவட்ட கலெக்டர்களும் பயனாளிகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று உதவித்தொகை வழங்க சம்மந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் வங்கி சேவையாளர்களுக்கும், தபால் துறை ஊழியர்களுக்கும் உரிய அறிவுரைகளை மாவட்ட கலெக்டர்கள் வழங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story