மாநில செய்திகள்

பலசரக்கு கடைகளில் மளிகை பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு + "||" + Severe shortage of groceries in grocery stores The public is suffering

பலசரக்கு கடைகளில் மளிகை பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு

பலசரக்கு கடைகளில் மளிகை பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு - பொதுமக்கள் தவிப்பு
சென்னையில் பலசரக்கு கடைகளில் மளிகைப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்தகங்களில் நாப்கின், டிஷ்யூ பேப்பரும் கிடைக்காததால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
சென்னை, 

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் சாலையில் நடமாடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை செயல்படலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தடை உத்தரவு எதிரொலியாக காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. அதேவேளை மளிகை கடைகளிலும் பொருட்களின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் பலசரக்குக் கடைகளில் மளிகை பொருட்களுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட தொடங்கி இருக்கிறது.

காய்கறி மார்க்கெட்கள் மற்றும் மொத்த பலசரக்கு விற்பனையகங்களில் சில்லரை வர்த்தகத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் மட்டுமே சந்தைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி அந்தந்த பகுதிகளில் கடைகளில் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே மளிகை பொருட்கள் விலை உயர்வு புகார் புறப்பட்டு வரும் வேளையில், தற்போது மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. பலசரக்கு கடைகளில் விரும்பிய பொருட்களை தேவையான அளவில் வாங்க பொதுமக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது. பொதுவாகவே மக்கள் விரும்பும் வகையில் பொருட்களை விற்பனை செய்வதே கடைகளில் வழக்கமாக இருந்து வந்தது. இப்போது அந்த நிலை இல்லை.

குறிப்பிட்ட காய்கறிகள்

பல கடைகளில் தேவையான காய்கறிகள் இருப்பதில்லை. தக்காளி, வெங்காயம், பட்டாணி, முருங்கைக்காய், கத்தரிக்காய் போன்ற ஒரு சில குறிப்பிட்ட காய்கறிகளையே பார்க்க முடிகிறது. பல கடைகளில் காய்கறியை கூறு கட்டியும் வைத்திருக்கிறார்கள்.

அதேபோல குறிப்பிட்ட அளவில் மட்டுமே மசாலா பொடி பாக்கெட்டுகள், பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்டவற்றை வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள். தனியார் பால் பாக்கெட்டுகள் கூட ஒரு நபருக்கு இரண்டு பாக்கெட்டுகள் கிடைப்பதே கடினமாக இருக்கிறது.

உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் ஏராளமான கடைகளில் கிடைப்பதில்லை. நறுமணப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவது இல்லை. எப்போது என்ன பொருட்கள் கேட்டாலும், ‘இப்போது இல்லை, சரக்கு வந்ததும் தருகிறேன்’, என்பதே பெரும்பாலான கடைக்காரர்களின் தற்போதைய பதிலாக இருந்து வருகிறது.

அந்த அளவுக்கு கடைகளில் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைப்பது இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த சில நாட்களாகவே பலசரக்கு கடைகளில் தேவையான பொருட்களை வாங்க முடிவதில்லை. 10 பொருட்கள் கேட்டு சென்றால் 2 பொருட்கள் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. எப்போது கேட்டாலும் சரக்கு வரவில்லை என்கிறார்கள். அதேவேளை பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.

உண்மையிலேயே பலசரக்கு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா? அல்லது சூழ்நிலையை பயன்படுத்தி பொருட்களை அதிக விலைக்கு விற்க வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனரா? என்று தெரியவில்லை. இதனால் அடிக்கடி மளிகை கடைகளுக்கு அலைவது வாடிக்கையாக இருக்கிறது. பல கடைகளில் பொருட்களின் இருப்பு குறைவது வெளிப்படையாகவே தெரிகிறது. இந்த நிலையை போக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக பல சரக்கு கடை வியாபாரிகள் கூறுகையில், “முன்புபோல மொத்த வியாபாரிகளிடம் இருந்து சரக்குகளை பெற முடிவதில்லை. பொருட்களை வாங்க நாங்களே வண்டி எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் சொல்லும் விலையும் எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை. இதனால் குறைவான அளவிலேயே பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறோம்”, என்றனர்.

சென்னை திருவான்மியூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், நுங்கம்பாக்கம் தேனாம்பேட்டை, ராயப்பேட்டை மயிலாப்பூர், பெசன்ட் நகர், அடையாறு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பலசரக்குக் கடைகளில் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதேபோல மருந்தகங்களில் தட்டுப்பாடு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. முககவசம், சானிடைசர் போன்றவை கிடைப்பது இல்லை. 80 சதவீத மருந்தகங்களில் முக கவசம், சானிடைசர் இருப்பு இல்லை என்று போர்டு எழுதி வைத்துள்ளனர். அதேவேளை சானிட்டரி நாப்கின்கள், டிஷ்யூ பேப்பருக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. ஏராளமான கடைகளில் கிருமிநாசினிகள் தீர்ந்துவிட்டன. சில மருந்தகங்கள் திறக்கப்படாத நிலையும் இருக்கிறது.

இதனால் மக்கள் பெரிதும் தவித்து வருகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் முக கவசமும், சானிடைசரும் மிகவும் முக்கியம் என்றாலும், மருந்தகங்களிலேயே அவை கிடைப்பதில்லை என்பதால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.

பொதுவாகவே காய்கறி, சமையல் பொருட்களும் திடீரென்று தீர்ந்துவிட்டால் பக்கத்து வீட்டு கதவை தட்டுவது வழக்கம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அதுவும் சாத்தியமில்லை. ஏனென்றால் நோய் தொற்றுக்கு பயந்து அனைத்து வீடுகளும் மூடியே இருக்கின்றன. மளிகைப் பொருட்களும், தேவையான மருந்துப் பொருட்களுக்கும் கடை கடையாக பொதுமக்கள் சுற்றி தவித்து போகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் - அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்
திருப்பத்தூர் நகர அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கே.சி.வீரமணி 1,000 பேருக்கு மளிகை பொருட்கள் வழங்கினார்.
2. முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மளிகை பொருட்கள் வணிகர் சங்க பேரவை அறிவிப்பு
முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மளிகை பொருட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
3. முதல் கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.6 கோடியில் அரிசி, மளிகை பொருட்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 1 லட்சத்து 20 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.6 கோடியில் அரிசி, மளிகை பொருட்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
4. கனரா வங்கி ஊழியர்கள் சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய 100 பொட்டலங்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது
ஈரோடு மண்டலத்தில் பணியாற்றும் கனரா வங்கி ஊழியர்கள் சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய 100 பொட்டலங்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.
5. ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.