சொந்த வீட்டிலேயே நகை, பணம் திருடிய பெண்; காட்டி கொடுத்த மோப்ப நாய்


சொந்த வீட்டிலேயே நகை, பணம் திருடிய பெண்; காட்டி கொடுத்த மோப்ப நாய்
x
தினத்தந்தி 4 April 2020 6:00 PM IST (Updated: 4 April 2020 6:00 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் சொந்த வீட்டிலேயே 100 பவுன் நகைகளை திருடி விட்டு நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரிய செல்வநகர் பகுதியில் வசித்து வருபவர் வின்சென்ட்.  இவரது மனைவி ஜான்சி.  துறைமுக ஊழியரான வின்சென்ட், தனது வீட்டின் வாசல் கதவை பூட்டாமல் ஒரு அறையில் படுத்து தூங்கி உள்ளார்.  அவரது மனைவியும் உடன் தூங்கி உள்ளார்.

இதன்பின் காலை எழுந்து பார்த்தபொழுது, அவரது வீட்டின் பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.28 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

வீடு முழுவதும் பீரோவில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே கீழே விழுந்து கிடந்துள்ளன.

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்பட்டது.  இதுபற்றி தாளமுத்து நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  போலீசாருக்கு கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

இதனால் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.  ஆனால், அது வீட்டிற்குள்ளேயே நின்று விட்டது.  இதில் சந்தேகமடைந்த போலீசார் வின்சென்ட்டின் மனைவியிடம் விசாரித்து உள்ளனர்.  விசாரணையில் போலீசாரிடம் முன்னுக்குபின் முரணான தகவலை அவர் அளித்து உள்ளார்.  பின்னர் கடுமையாக விசாரித்ததில் பல உண்மைகள் வெளிவந்தன.

ஜான்சி பலரிடம் கடன் வாங்கியுள்ளார்.  ஆனால் அவற்றை திருப்பி செலுத்த கணவர் பணம் தரவில்லை.  இதனால் சொந்த வீட்டிலேயே திருடும் முடிவை அவர் எடுத்து உள்ளார்.  கணவன் தூங்கிய நேரத்தில் கைவரிசை காட்டிய அவர், பின்பு அறையை பூட்டி விட்டு ஒன்றும் தெரியாதது போல் படுத்துள்ளார்.  அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story