தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 April 2020 2:47 AM GMT (Updated: 5 April 2020 5:17 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் கொரோனாவால் 411 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மேலும் 74 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகக்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்து இருக்கிறது.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 54 வயது ஆண் ஒருவர் கடந்த மாதம் 26-ந் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதுதான் தமிழகத்தில் நிகழ்ந்த முதல் கொரோனா பலி ஆகும். இதையடுத்து, டெல்லி மாநாட்டுக்குச்சென்று திரும்பிய 51-வயது ஆசிரியர், நேற்று காலை 7.45 மணியளவில் உயிரிழந்தார். இதேபோல் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த ஒரு பெண்ணும்  நேற்று கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார்.  

இந்த நிலையில், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72-வயது முதியவர் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவர் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்தவர் ஆவார். துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது.

Next Story