உயிரோடு விளையாட வேண்டாம்: ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருங்கள் - இளைஞர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை


உயிரோடு விளையாட வேண்டாம்: ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருங்கள் - இளைஞர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை
x
தினத்தந்தி 6 April 2020 2:30 AM IST (Updated: 6 April 2020 2:05 AM IST)
t-max-icont-min-icon

உயிரோடு விளையாட வேண்டாம், ஊரடங்கை மதித்து வீட்டிலேயே இருங்கள் என்று இளைஞர்களுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உடல் வலிமை மிக்கவர்கள், மிகவும் ஆரோக்கியமான வயதுப் பிரிவினர் என்று நம்பப்பட்டு வந்த 21 முதல் 40 வயது வரையிலான இளைஞர்கள் தான் கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகி இருக்கின்றனர். இந்த புள்ளிவிவரம் மிகச்சரியான நேரத்தில் வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய காலத்திலேயே, ‘இளைஞர்கள் கொரோனாவால் வீழ்த்த முடியாதவர்கள் அல்ல. அந்த வைரஸ் உங்களை பல வாரங்கள் மருத்துவமனையில் தள்ளக்கூடும். ஏன் கொல்லவும் கூடும்’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை செயலர் டாக்டர் டெட்ராஸ் கூறியதை சுட்டிக்காட்டி, இளைஞர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பா.ம.க. அறிவுறுத்தி இருந்தது. அது இப்போது உறுதியாகி உள்ளது.

குழந்தைகளையும், முதியவர்களையும் விட கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து இளைஞர்களுக்குத் தான் மிக அதிகமாக உள்ளது என்பதால் உயிரோடும், நோயோடும் அவர்கள் விளையாடக்கூடாது. இத்தகைய சூழலில் சாகசம் என்பது தற்கொலைக்கு சமம் ஆகும். எனவே, நிலவும் சூழலை உணர்ந்தும், இளைஞர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்பதை அறிந்தும் மோட்டார் சைக்கிளில் சாலைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் அடங்கி தம்மையும், நாட்டையும் இளைஞர்கள் காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story