பெட்ரோல் நிலையங்கள் பிற்பகல் 1 மணி வரைதான் செயல்படும் - விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு


பெட்ரோல் நிலையங்கள் பிற்பகல் 1 மணி வரைதான் செயல்படும் - விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 April 2020 2:15 AM IST (Updated: 6 April 2020 2:10 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் நிலையங்கள் பிற்பகல் 1 மணி வரைதான் செயல்படும் என்று விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கு, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை ஏற்கனவே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அந்த நேரத்தை மேலும் குறைத்து, காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என அரசு தெரிவித்து இருக்கிறது. அதன்படி, பெட்ரோல் நிலையங்களும் பிற்பகல் 1 மணி வரை தான் செயல்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்து இருக்கிறது. இதுதொடர் பாக அந்த சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி கூறியதாவது:-

அரசு உத்தரவின்படி, அனைத்து பெட்ரோல் நிலையங்களும் பிற்பகல் 1 மணி வரை தான் செயல்படும். அதன் பிறகு பொதுமக்கள் யாருக்கும் கண்டிப்பாக பெட்ரோல் விற்பனை செய்யப்படாது. பெட்ரோல் நிலையங்களில் தடுப்பு வேலி மற்றும் கயிறு கட்டி வைக்கப்பட்டு இருக்கும்.

ஆம்புலன்ஸ் மற்றும் வருவாய்த் துறையின் அனுமதி கடிதம் பெற்று கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு இருக்கும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்படும். இதற்காக ஒவ்வொரு பெட்ரோல் நிலையங்களிலும் ஒன்று அல்லது 2 பேர் பணியில் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story