கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப்படுத்திக்கொள்வதுதான் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
கொரோனா தொற்றுக்கு ஒரே மருந்து தனிமைப் படுத்தி கொள்வதுதான் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சென்னை,
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்க வருமுன் காப்போம் என்ற திட்டம் மூலம் முதல்- அமைச்சர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டதை அடுத்து, அது துறை ரீதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் தற்போது ரூ.405 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு ரூ.3,280 கோடி செலவில் நிவாரண நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்காக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கியுள்ளார்.
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க இதுவரை 11 கூட்டங்களை முதல்-அமைச்சர் நடத்தியிருக்கிறார். இந்த வைரசுக்கு ஒரே மருந்து சுய தனிமை தான். மக்களின் ஒத்துழைப்பு தான் இந்த நோய்க்கு ஒரே தீர்வு. பொதுமக்கள் தொடர்ந்து வெளியே வருகின்றனர்.
அத்தியாவசிய பொருட் களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா வைரஸ் தடுப்புக்காக மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.510 கோடி ஒதுக்கியுள்ளது. கிராம பகுதிகளில் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் முதல் நிலை தேர்ச்சி பெற்ற தன்னார்வ இளைஞர்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story