ஒரே நாளில் 50 பேருக்கு உறுதியானது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்வு


ஒரே நாளில் 50 பேருக்கு உறுதியானது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 April 2020 11:00 PM GMT (Updated: 6 April 2020 9:24 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 621 பேராக உயர்ந்தது. 1,766 பேர் சந்தேகத்தால் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் 571 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 50 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். மீதம் 2 பேரும் சென்னையை சேர்ந்தவர்கள். அவர்கள் குறித்து தற்போது தான் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் தமிழகத்தில் 621 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழக மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

57 வயது பெண் நேற்று முன்தினம் இரவு அதிக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் அதிகமாக காணப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த மாதம் 20-ந்தேதி திருச்சிக்கு ரெயில் மூலம் சென்று வந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பெண்ணுக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா வைரசின் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்துடன் தமிழகத்தில் 6 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 574 பேர் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையை சேர்ந்த 15 பேரும், திருச்சியை சேர்ந்த 13 பேரும், திருப்பூரை சேர்ந்த 4 பேரும், கடலூர், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 3 பேரும், செங்கல்பட்டு, காஞ்சீபுரத்தை சேர்ந்த தலா 2 பேரும், கோவை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் தற்போது 5 ஆயிரத்து 15 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அதில் 295 பேருக்கு ரத்த மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. தமிழக அரசு மருத்துவமனைகளில் நேற்று 1,766 பேர் கொரோனா நோய் தொற்று சந்தேகத்துடன் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story