தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கைது - சென்னையில் கொரோனா பாதித்த 47 இடங்களுக்கு ‘சீல்’ வைப்பு
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் கொரோனா பாதிப்பால் 47 இடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னைதான் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் ராயபுரம் மண்டலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. எனவே வட சென்னையில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளை தனிமைப்படுத்தி அந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் ‘சீல்’ வைக்கப்படுகின்றன. ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியில் செல்ல முடியாது.
அந்த வகையில் நேற்று வரை சென்னையில் 47 இடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுக்க பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து வீடுகளில் இருக்க வேண்டும் என்றும், வாகனங்களில் சாலைகளில் தேவை இல்லாமல் சுற்றக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
அந்த வகையில் நேற்று பகல் வரை தமிழகம் முழுவதும் 92 ஆயிரத்து 862 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,01,964 பேர் கைது செய்யப்பட்டனர்.
78 ஆயிரத்து 240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி கைது எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் தெருக்களில் சுற்றுவோரை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகல் 1 மணிக்கு பிறகு, பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் சுற்றுவதை தடுக்க தெருக்களை ஒரு வழிப்பாதையாக அறிவித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில், ஒரு தெருவழியாக உள்ளே செல்பவர்கள், இன்னொரு தெரு வழியாக வெளியில் வரவேண்டும்.
Related Tags :
Next Story