ஊரடங்கு அமலில் உள்ளதால் 14 ஆயிரத்து 723 கைதிகள் ‘வீடியோ கால்’ மூலம் குடும்பத்தினருடன் பேசினர் - ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்
ஊரடங்கு அமலில் உள்ளதால் ‘செல்போன் வீடியோ கால்’ மூலம் 14 ஆயிரத்து 723 கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தங்களது குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அதனால் தங்களுக்கு ‘பரோல்’ வழங்கவேண்டும் என்று தண்டனை கைதிகள் பலர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் எல்லாம் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கே.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் ஆர்.பிரதாப்குமார் கூறியதாவது:-
தமிழக சிறைகளுக்குள் உள்ள கைதிகள் கொரோனா வைரஸ் தொற்று எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக உள்ளனர். சென்னையை பொருத்தவரை புழல் சிறையில் புதிய கைதிகளை அடைக்காமல், அவர்களை சைதாப்பேட்டை கிளை சிறையில்தான் அதிகாரிகள் அடைக்கின்றனர்.
மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேசிய அளவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையை கருதி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 58 செல்போன்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த செல்போன்களை பயன் படுத்தி ‘வீடியோ கால்’ மூலம் 14 ஆயிரத்து 723 கைதிகள், தங்களது குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 4-ந்தேதி வரையில்தான். அதன் பின்னரும் பல கைதிகள் குடும்பத்தினருடன் பேசி வருகின்றனர். எனவே, சிறையில் உள்ள கைதிகள் வைரஸ் தொற்று எதுவும் இன்றி பாதுகாப்பாக உள்ளனர் என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக சிறைத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த வழக்குகளின் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story