ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு சோதனை; 30 நிமிடங்களில் முடிவு நாளை முதல் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை


ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு சோதனை; 30 நிமிடங்களில் முடிவு நாளை முதல் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 9 April 2020 10:42 AM IST (Updated: 9 April 2020 10:42 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு சோதனை; 30 நிமிடங்களில் முடிவு நாளை முதல் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட உள்ளது.

சென்னை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதை உணர்த்தும் விதமாக கடந்த 24 மணிநேரத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 17 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கொரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 734 ஆகவும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 166 ஆகவும் அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆறுதல் தரும் வகையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது.

8 உயிரிழப்புகள் மராட்டியத்திலும், குஜராத்தில் 3 பேரும், ஜம்மு காஷ்மீரில் இருவரும், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தமிழகத்தில் தலா ஒருவரும் கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

கொரோனா தொற்று சோதனைக்காக சீனாவிலிருந்து ஒரு லட்சம் துரித சோதனை கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. தமிழகத்திற்கு இன்று வரும் இந்தக் கருவிகள் நாளை முதல் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படவுள்ளன.

இந்தக் கருவிகள் கிடைத்தவுடன் விரைவாக வேகமாக ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். அந்தப் பரிசோதனையின் முடிவுகள் 30 நிமிடங்களில் பெற முடியும். கொரோனா அதிகம் பாதித்த இடங்களுக்கு இந்த உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

துரித பரிசோதனை கருவிகள், சமூகப் பரவல் இருக்கிறதா என்பதை அறிய உதவும். இந்த கருவிகள் தடுத்து வைக்கப்பட்ட பகுதிகளில் பயன்படுத்தி சமூகப் பரவலை அறியவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
அண்ணா பல்கலைகழக ஜி.ஐ.எஸ் மேப்பிங் மூலமாக எந்தெந்த பகுதி மக்களுக்கு துரித பரிசோதனைகள் தேவைப்படும் என்பது கண்டறியப்படும்.


Next Story