தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்பொழுது, தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 42 பேர் ஒரே மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆவர். இவர்களில் ஒருவர் மலேசியாவை சேர்ந்தவர். தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
வீட்டு கண்காணிப்பில் 60,739 பேர், அரசு கண்காணிப்பின் கீழ் உள்ள கொரோனா வார்டுகளில் 230 பேர் உள்ளனர்.
28 நாட்கள் நிறைவு செய்தவர்கள் எண்ணிக்கை 32,075. இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை 6,095 ஆகும். வேலூரில் ஒருவர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது. முகக்கவசங்கள் போதிய அளவில் உள்ளன. 72 வயது முதியவர் உள்பட 21 பேர் குணமடைந்து உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. வீட்டில் இருங்கள். தேவைப்பட்டால் சிகிச்சைக்கு வாருங்கள். போதுமான மருத்துவ உபகரணங்கள் இருப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தமிழகத்தில் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக உயர்ந்து உள்ளது.
ஒரே குழுவாக டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்கள் எண்ணிக்கை 1,480. அவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 763 ஆகும். மொத்தம் 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டது தெரிய வந்தால் உடனடி தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
புதிய சோதனை கருவி மூலம் 33 நிமிடங்களில் முடிவு தெரியும். கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story