மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ல் இருந்து 834 ஆக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் அதிக பாதிப்பு எண்ணிக்கை வரிசையில் சென்னை முதல் இடம் வகிக்கிறது. இதனை தொடர்ந்து கோவை (60) மற்றும் நெல்லை (56) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஈரோட்டில் அதிக அளவாக இன்று ஒரே நாளில் 26 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லையில் 16 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தமிழக அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் காணொலிக் காட்சி மூலம் அலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனையில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பது குறித்து நிபுணர்களின் கருத்துகளை முதல்வர் கேட்டறியவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story