கொரோனா பற்றிய சந்தேகங்களை தீர்க்க குரல் வழிச்சேவை - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


கொரோனா பற்றிய சந்தேகங்களை தீர்க்க குரல் வழிச்சேவை - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 April 2020 4:30 AM IST (Updated: 10 April 2020 2:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பற்றிய சந்தேகங்களை தீர்க்க குரல் வழிச்சேவையை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்திலும், மத்திய சட்டம் மற்றும் நீதி, தொலைத் தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் டெல்லியிலும் நேற்று, கொரோனா குறித்த சுய தகவல் பதிவு மற்றும் விரைவு நடவடிக்கை அமைப்பின் 94999 12345 என்ற குரல்வழிச் சேவையை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தனர்.

மாநில அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பி.எஸ்.என்.எல். இணைந்து இந்த குரல்வழிச் சேவையை உருவாக்கியுள்ளன.

இந்த குரல்வழிச் சேவை மூலம், பயனாளிகள் மிஸ்டு கால் அல்லது குறுந்தகவலை 94999 12345 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

பயனாளிகள் பதிவு செய்த தகவலை குறுஞ்செய்தியாக உடனடியாகப் பெறுவார்கள். அதைத்தொடர்ந்து, பி.எஸ்.என்.எல். எண்ணிலிருந்து பயனாளிகள் அழைப்பை பெறுவார்கள்.

பயனாளிகளின் பதில்கள் மற்றும் இருப்பிடங்களை ஆராய்ந்து, மேல் நடவடிக்கைகளுக்காக தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டு, நோயின் தன்மைக்கேற்ப அவசர ஊர்தி உள்ளிட்ட மருத்துவ சேவையை பெற, பயனாளிகளுக்கு மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை உதவி செய்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story